தீபாவளி சீட்டு நடத்தி மோசடி நகைக்கடை உரிமையாளர் பல லட்சத்துடன் ஓட்டம்: பாதிக்கப்பட்டவர்கள் மறியல்

பூந்தமல்லி: தீபாவளி சீட்டு நடத்தி, பல லட்சத்துடன் தலைமறைவான நகைக்கடை உரிமையாளரை கைது செய்ய கோரி, பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போரூர் நான்கு சாலை சந்திப்பில் மனோஜ் என்பவர் நகைக்கடை நடத்தி வந்தார். இவர், மாதம்தோறும் ரூ.500 முதல் ரூ.1500 வரை தீபாவளி நகை சீட்டு நடத்தி வந்துள்ளார். இதில்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பணம் கட்டி வந்தனர்.கட்டிய தொகைக்கு ஏற்ப நகை, வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை தீபாவளி பண்டிகைக்கு முன்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்து இருந்தார். ஆனால், அதன்படி வழங்கவில்லை. சீட்டு கட்டியவர்கள் இதுபற்றி கேட்டபோது, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. அதனால், விரைவில் கொடுத்து விடுகிறேன், என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக நகைக்கடை திறக்கப்படவில்லை. இதையறிந்த வாடிக்கையாளர்கள் வீட்டிற்கு சென்றபோது, வீடும் பூட்டப்பட்டு இருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள், போலீசில் புகார் அளித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், கடை முன்பு பலமுறை போராட்டம் நடத்தினர். ஆனாலும் நடவடிக்கை இல்லை.இதனால், பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று நகைக் கடையை முற்றுகையிட்டு, மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வளசரவாக்கம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர்.

Related Stories:

>