ஒரே நாளில் 3 நிறுவனங்களுக்கு சென்றார் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பாதுகாப்பு உடையுடன் மோடி ஆய்வு

புதுடெல்லி: இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 8 மாதத்துக்கும் மேலாக கொரோனா நோய் தொற்று பொதுமக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டு வருகிறது. நாள்தோறும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகிறது. கொரோனா நோய்க்கு எதிராக சரியான தடுப்பு மருந்து இல்லாததால் நோய் தொற்றை முழுமையாக குணப்படுத்த முடியாமல் சர்வதேச நாடுகள் அவதிக்குள்ளாகி வருகின்றன. கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில் பல்வேறு நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில் 3 கொரோனா தடுப்பு மருந்துகள் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றது.

குஜராத் மாநிலம், அகமதபாத் அருகே ஜைகோவ்-டி, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கோவிஷீல்டு, ஐதராபாத்தில் கோவாக்சின் ஆகிய 3 தடுப்பு மருந்துகளின் தயாரிப்பு மற்றும் பரிசோதனை நடந்து வருகின்றது. அகமதபாத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள சங்கோடர் பகுதியில்  உள்ள ஜைடஸ் கெடிலா நிறுவனம், ஜைகோவி-டி கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து வருகின்றது. இந்த மருந்தின் முதல் கட்ட சோதனைகள் முடிந்து விட்டது. இரண்டாவது கட்ட பரிசோதனை நடந்து வருகின்றது.

இந்நிலையில், இந்த மருந்து தயாரிக்கும் பணிகளை பிரதமர் மோடி நேற்று நேரில் பார்வையிட்டார். இதற்காக இந்த நிறுவனத்துக்கு நேற்று காலை சென்ற பிரதமர் மோடி, ‘பிபிஇ’ எனப்படும் பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து கொண்டார். தடுப்பு  மருந்தின் மேம்பாடு மற்றும் உற்பத்தி, செயல்முறை உள்ளிட்டவை குறித்து நேரடியாக ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, ஐதரபாத்தில் உள்ள பாரத் பயோடெக், புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்திய ஆகிய மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் சென்று அவர் ஆய்வு செய்தார்.

Related Stories: