2021 ஜூன் 1ம் தேதி முதல் ‘பிஐஎஸ்’ சான்று இல்லாத ஹெல்மெட் தயாரிப்பு, விற்பனைக்கு தடை : மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி, :அடுத்தாண்டு ஜூன் 1ம் தேதி முதல் ‘பிஐஎஸ்’ தரச்சான்று இல்லாத ஹெல்மெட் தயாரிப்பு, விற்பனைக்கு தடை விதித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி இலகுரக ஹெல்மெட் தயாரிப்பை  உறுதிசெய்யும் வகையில் சாலை பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில்  எய்ம்ஸ் வல்லுநர்கள் மற்றும் இந்திய தர நிர்ணய அமைப்பின் நிபுணர்கள் உட்பட  பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் இடம்பெற்று இருந்தனர். இந்த  குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பித்தது. அதனை ஆராய்ந்த மத்திய  அரசு குறைந்த எடை  கொண்ட ஹெல்மெட்டை மார்ச் 2018ல் பரிந்துரைத்தது.

இந்நிலையில் இந்திய தரநிர்ணய அமைப்பால் (பிஐஎஸ்) சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரது அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, ‘இந்திய தர நிர்ணய அமைப்பின் (பிஐஎஸ்) கட்டாய சான்றிதழின் கீழ், இரு சக்கர வாகனங்களுக்கான பாதுகாப்பு தலைக்கவசங்கள் தரக் கட்டுப்பாட்டு வெளியீட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. வருகிற 2021 ஜூன் 1ம் தேதி முதல் பிஐஎஸ் சான்று அல்லாத ஹெல்மெட்டை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ முடியாது. இருசக்கர வாகனம் ஓட்டுநர்கள் தங்களது தலைக்கவசங்களை (ஹெல்மெட்) பிஐஎஸ் சான்றளிக்கப்பட்டதை பார்த்து வாங்க வேண்டும்.

அதுபோன்ற ஹெல்மெட் மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய முடியும். மலிவான அல்லது பிஐஎஸ் சான்று இல்லாத ஹெல்மெட்டை வாங்கி அணிந்திருந்தால், அதனை மாற்றிக் கொள்ள வேண்டும். அரசின் இந்த முடிவால் ஹெல்மெட்டின் தரம் உறுதி செய்யப்படும். இதற்காக இரு சக்கர மோட்டார் வாகன தரக் கட்டுப்பாடு சட்டத்தின் ஹெல்மெட் ஆணை - 2020 பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எய்ம்ஸ் அறுவை சிகிச்சை பேராசிரியர் டாக்டர் அமித் குப்தா கூறுகையில், ‘சாலை போக்குவரத்து விபத்து காயங்களில் சுமார் 45 சதவீதம் தலையில்தான் காயங்கள் ஏற்படுகின்றன. இவற்றில் 30 சதவீதம் கடுமையான காயங்களாக ஏற்படுவதால் மரணத்திற்கு வழிவகுக்கிறது. அல்லது மூளை பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கடந்த ஆண்டில், 56,000 இருசக்கர வாகன ஓட்டிகளில் 43,600 பேர் ஹெல்மெட் அணியாததால் பலியாகினர். தரமற்ற ஹெல்மெட் அணிவதன் காரணமாக விபத்தில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை’ என்றார்

இதுகுறித்து, ஹெல்மெட் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ராஜீவ் கபூர் கூறுகையில், ‘இந்தியாவில் தினமும் சுமார் 2 லட்சம் ஹெல்மெட் விற்கப்படுகின்றன. அவற்றில் கிட்டத்தட்ட 40 சதவீதம் தரமற்றவை. பெரும்பாலான நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் வெறுமனே பிளாஸ்டிக் தொப்பிகளை அணிந்து செல்கின்றனர். ஹெல்மெட் தரக் கட்டுப்பாட்டு விதிகளை கடுமையாக்குவதன் மூலம் இரு சக்கர வாகன ஓட்டிகளின் இறப்பை குறைக்க முடியும்’ என்றார்.

Related Stories:

>