திருமணத்திற்காக மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை... அவசர சட்டத்திற்கு உத்தரப்பிரதேச ஆளுநர் ஒப்புதல்!!

லக்னோ,:நேர்மையற்ற முறையில் மதம் மாறுவது, சட்டவிரோத மதமாற்றம், லவ் ஜிகாத் ஆகியவற்றைத் தடுக்க கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டத்துக்கு உத்தரப்பிரதேச ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த சில ஆண்கள் மற்றொரு மதத்தை சேர்ந்த பெண்களை ‘லவ் ஜிஹாத்’ என்ற பெயரில் காதல் வலையில் விழவைத்து அவர்களை கட்டாயமாக மதமாற்றம் செய்வதாக உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன. காதலின் பெயரால் கட்டாய மதமாற்றத்தை தடுக்க சட்டம் கொண்டுவரப்படும் என்று உத்தர பிரதேசமுதல்வர் யோகி ஆதித்யநாத் ஏற்கெனவே அறிவித்தார். இதுதொடர்பாக அவசர சட்டத்தை உருவாக்க அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.

அதன்படி, மாநில சட்டக் கமிஷன் புதிய மசோதா தயாரித்து அரசுக்கு அனுப்பியது. இதன் அடிப்படையில் திருமணத்திற்காக கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் வகையில் ‘லவ் ஜிஹாத்’துக்கு எதிரான அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்படி, மதம் மாறி திருமணம் செய்து கொள்ள விரும்புவோர், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரிடம் இரண்டு மாதங்களுக்கு முன்பே தகவல் அளிக்க வேண்டும். அவரின் அனுமதி கிடைத்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம். அதை மீறி திருமணம் செய்து கொண்டால், ஆறு மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் அதுபோன்று நடத்தப்படும் திருமணம் சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கப்படும், திருமணத்துக்காக மதம் மாறினாலும் மதம் மாறிய பெண் தன்னுடைய மதத்தை மாற்ற விரும்பினாலும் அது சட்டப்படி ஏற்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வரைவு அவசரச் சட்ட மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக உத்தரப்பிரதேச அரசு அனுப்பி இருந்தது. இந்த அவசரச்சட்டத்துக்கு ஆளுநர் ஆனந்தி பென்படேல் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, லக் ஜிகாத் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>