நிவர் புயல் இன்று முழுமையாக கரையைக்கடக்கும் மேலும் 2 புயல் அடுத்த வாரம் வருகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவு கரையை கடக்கத் தொடங்கிய நிவர் புயல் நேற்று மாலை வரை தமிழக எல்லையில் நிலை கொண்டு இருந்தது. இதன் காரணமாக வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதையடுத்து, இன்று தான் அந்த புயல் தமிழக எல்லையைவிட்டு முழுமையாக கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்ததாக இரண்டு புயல்கள் வங்கக் கடலில் உருவாக உள்ளன.வங்கக் கடலில் கடந்த நான்கு நாட்களாக நிலை கொண்டு இருந்த நிவர் புயல் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி முதல் 2.30 மணி அளவில் மாமல்லபுரம் அடுத்த கூவத்தூர் வழியாக கரையைக் கடந்தது. இதன் காரணமாக விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக புதுச்சேரி, கடலூர், செங்கல்பட்டு மாவட்டம் ஆகிய இடங்களில்தான் மழை பெய்தது.

இந்த புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று முன்பு கணிக்கப்பட்ட நிலையில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக அந்த புயல் மாமல்லபுரம், கேளம்பாக்கம் பகுதியையும் ஒட்டிய நிலையில் கரையைக் கடந்ததால் தாம்பரத்தில் அதிகபட்சமாக 310 மிமீ மழை கொட்டித் தீர்த்தது. அதற்கு அடுத்தபடியாக புதுச்சேரி 300மிமீ , விழுப்புரம் 280 மிமீ, கடலூர் 270மிமீ, சென்னை டிஜிபி அலுவலகம் 260மிமீ, சோளிங்கநல்லூர் 220 மிமீ, தாமரைப்பாக்கம் 190மிமீ மழை பெய்தது.இதையடுத்து, நேற்று காலை முதல் மாலை வரை நிவர் புயல் வந்தவாசி வழியாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் பகுதிக்கு சென்று அங்கு பலத்த மழையை கொடுத்தது. அப்போது இந்த புயலின் ஒரு பகுதி ஆந்திர மாநிலத்தில் நுழைந்ததால் அங்கும் மழை ெகாட்டித் தீர்த்தது. இதையடுத்து இன்று மாலை அந்த நிவர் புயல் கர்நாடகா மாநிலம் வழியாக சென்று நாளை மகாராஷ்ட்ராவுக்குள் நுழைந்து வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் தற்போது கரையைக் கடந்த போதிலும், இன்று தமிழகத்தில் சில மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால், ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சிலஇடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். இதையடுத்து, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும்.நாகப்பட்டினம் மாவட்டம் முதல் சென்னை வரை கடலோரப் பகுதியில் பெருத்த சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்ற இந்த நிவர் புயல் மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து சென்ற நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு நீங்குவதற்கு முன்பாக அடுத்த கட்டமாக தெற்கு அந்தமான் பகுதியில் 30ம் தேதி மீண்டும் ஒரு காற்றழுத்தம் ஏற்பட்டு அது வலுப்பெற்று புயலாக மாறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இது மேலும் வலுப்பெற்று மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து சென்று டிசம்பர் 2ம் தேதி நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்–்கள் வழியாக கரையைக் கடந்து அரபிக் கடலுக்குள் செல்லும். பின்னர் டிசம்பர் 5ம் தேதி மேலும் ஒரு புயல் உருவாகி, வட மேற்கு திசையில் நகர்ந்து சென்னை அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இந்த இரண்டு புயல்களையும் சந்திக்க இப்போதில் இருந்தே பொதுமக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

Related Stories: