முதுமலை புலிகள் காப்பகத்தின் சுற்றுச்சூழல் சார்ந்த சேவைகளின் பொருளாதார மதிப்பீடு அளவீடு

ஊட்டி: முதுமலை புலிகள் காப்பகத்தின் சுற்றுச்சூழல் சேவைகளின் பொருளாதார மதிப்பீடு முதன் முறையாக அளவிடப்பட்டுள்ளன. அவற்றின் ஆண்டு மதிப்பு ரூ.14 ஆயிரத்து 650 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இக்காப்பகத்தின் மூலம் பொருளாதாரத்திற்கும், சமூகத்தின் நல்வாழ்விற்கும் கணக்கிடப்படாத பெரிய சுற்றுச்சூழல் சேவை பங்களிப்புகளை மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டது. முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கிருஷ்ணகுமார் கவுசலின் மேற்பார்வையின் கீழ் மேகாலயா மாநிலம், பர்னிஹாட் மத்திய வன சேவை மையத்தை சேர்ந்த பயிற்சி உதவி வன பாதுகாவலர் சீனிவாசன், முதுமலை வனங்கள் வழங்கும் சுற்றுச்சூழல் சேவைகளின் பொருளாதார மதிப்பீடு குறித்த ஆய்வை முதன்முறையாக மேற்கொண்டார்.

ஆய்வில் ‘‘நாட்டில் புலி, யானைகளின் அதிகளவு வசிக்க கூடிய பகுதிகளில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது. புலி இருப்பு பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு ஏற்பட வன வளத்தை கொண்டுள்ளது.

இந்த வனங்கள் மண் வள பாதுகாப்பு, வளிமண்டலத்தின் காலநிலை மற்றும் வாயுக்களின் சமநிலையை சீராக்க உதவுகின்றன. புலிகள் காப்பகத்தின் மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம், கால்நடைகளுக்கு தீவனம், கார்பன் அளவை கட்டுபடுத்துதல், நீர் வழங்கல், ஊட்டச்சத்து தக்கவைத்தல், உயிரினங்களுக்கான வாழ்விடம், உயிரியல் கட்டுப்பாடு, மகரந்தச் சேர்க்கை, பொழுதுபோக்கு, எரிவாயு ஒழுங்குமுறை போன்ற நன்மைகளை வழங்குவது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றின் பொருளாதார மதிப்பு ஆண்டுக்கு ரூ.4199.55 கோடி மற்றும் காப்பகத்தில் உள்ள பல்வேறு வகை மரங்கள் போன்றவற்றின் மதிப்பு ஆண்டுக்கு ரூ.10454.06 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. பல்லுயிர் முக்கியத்துவம் வாய்ந்த முதுமலை புலிகள் காப்பக வனங்கள் அளிக்கும் சுற்றுச்சூழல் சேவைகளின் பொருளாதார மதிப்பீட்டின் படி மொத்த மதிப்பு ரூ.14 ஆயிரத்து 650 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கிருஷ்ணகுமார் கவுசல் கூறுகையில், வனங்கள் வழங்கும் சுற்றுச்சூழல் சேவைகளுக்கு பண மதிப்பைக் கொடுப்பதன் மூலம், ஒரு அளவை நிர்ணயிக்க முடியும். இதனால் நமது காடுகள் எவ்வளவு மதிப்புமிக்கவை என்பதைப் மக்களிடம் கொண்டு செல்ல முடியும். இந்த மதிப்பீடு வனங்கள் அதன் பலன்கள் குறித்து சரியான புரிதல் மற்றும் விழிப்புணர்வை உருவாக்குகிறது. இந்த மதிப்பீடுகள் புலி காப்பகங்களின் வெறும் அவற்றின் வாழ்விடங்கள் என்பதை தாண்டி அவற்றின் மதிப்பு குறித்து புரிந்து கொள்ள உதவும், என்றார்.

Related Stories: