தீயணைப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கும் கட்டிடங்களுக்கு நோட்டீஸ்: மதுரை உயர் நீதிமன்றம் பரிசீலனை

மதுரை: மதுரையில் ஏற்ப்பட்ட  தீ விபத்தில் 2தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தது தொடர்பாக தாமாக முன் வந்து விசாரணை நடத்த கூறிய முறையீடு பரிசீலனை செய்யப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மதுரை தெற்குமாசி வீதி நவபத்கானா தெருவில் உள்ள ஒரு ஜவுளி கடையில் தீபாவளியன்று அதிகாலை 2.45 மணியளவில் தீப்பிடித்து கரும்புகை வெளிவரத்தொடங்கியது. இதனை கண்ட அக்கம் பக்கத்தை சேர்ந்த கடைக்காரர்கள்  தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து மதுரை பெரியார், அனுப்பானடி, மீனாட்சி அம்மன் கோவில் நிலைய தீயணைப்பு அலுவலர்கள் வெங்கடேசன், உதயகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது எதிர்பாராத விதமாக அந்த கட்டிடத்தின் மேல் தளம் இடிந்து விழுந்தது. இதில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வழக்கறிஞர் கண்ணன் முறையீடு செய்துள்ளார்.

அதில் மதுரை ஜவுளி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயை அணைக்க சென்ற 2 தீயணைப்பு வீரர்கள் பலியானதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் மதுரையில் தீ விபத்து ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருக்கும் கட்டிடங்களை தீயணைப்பு துறையினர் ஆய்வு செய்து விளக்க நோட்டிஸ் அனுப்பியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் விதிமீறல்கள் குறித்து முறையாக ஆய்வு செய்திருந்தால் 2 பேர் உயிரிழப்பு தடுக்கப்பட்டிருக்கும் என்பதை கண்ணன் தெளிவுப்படுத்தியுள்ளார். இதுகுறித்து நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து  விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இதனை தொடர்நது இந்தமுறையிட்டை பரிசீலனை செய்வதாக நீதிபதிகள் கூறியுள்ளனர். விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: