வாலாஜாபாத் அடுத்த தென்னேரி ஏரி கரையில் நீர்கசிவு

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த தென்னேரி பகுதியில் உள்ள ஏரி கரையில் நீர்கசிவு ஏற்பட்டது. இதனை, அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றான தென்னேரி ஏரியின் நீர் கொள்ளளவு 21 அடியாகும். கடந்த சில நாட்களாக பெய்து வரும்  மழையால், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து தற்போது15 அடியாக கொள்ளளவு உயர்ந்துள்ளது.இதன் மூலம் 5500க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில், இந்த ஏரி நீர் பாசனத்துக்கு பயன்படுத்தப்படும்.மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான தென்னேரி ஏரி, வாலாஜாபாத்தில் இருந்து சுங்குவார்சத்திரம் செல்லும் சாலையை ஒட்டி  அமைந்துள்ளது. இந்த ஏரியின் கரையை உடைத்து, 4  வழி சாலையாக அகலப்படுத்தும் பணி நடந்தது.

தற்போது, பெய்து வரும் மழையால் ஏரியில் நீர் நிரம்பியுள்ளது. இதனால், ஏரியின் கரை அகற்றப்பட்ட பகுதிகளில் நீர் கசிந்து வெளியேறுகிறது.  இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன்பேரில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், நேற்று காலை, மேற்கண்ட பகுதிக்கு வந்து ஆய்வு  செய்தனர். பின்னர் அவர்கள், செய்தியாளர்களிடம் கூறியதாவது.

தென்னேரி ஏரியில், தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த ஏரி கரைகள் பலமிழந்து காணப்படுவதாகவும், கரைகளில் நீர்கசிவு உள்ளதாகவும்  பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன்படி நாங்கள் ஆய்வு செய்தபோது, அதுபோன்று எதுவும் இல்லை. ஆனாலும், கரையை பலப்படுத்தும் பணியில்  தொடர்ந்து பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள்  ஈடுபட்டுள்ளனர் என்றார்.

Related Stories: