ஈரோடு தொழிற்சாலைகள் இணை இயக்குநர் அலுவலக குப்பைத்தொட்டியில் கிப்ட் வவுச்சர்களை போட்டு மறைத்த அதிகாரிகள்: லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிர்ச்சி

ஈரோடு: ஈரோட்டில்  தொழிற்சாலைகள் இணை இயக்குநர் அலுவலக குப்பை தொட்டியில் கொட்டிக்கிடந்த கிப்ட் வவுச்சர்களை கண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். ஈரோடு எஸ்கேசி ரோடு, கந்தப்பா வீதியில் மாவட்ட தொழிற்சாலைகள் துணை இயக்குநர், இணை இயக்குநர் அலுவலகம் உள்ளது. இதில் உரிமம் புதுப்பிக்கவும், புதிதாக வழங்கவும் லஞ்சம் பெறப்பட்டு வருவதாகவும், தீபாவளி வசூல் வேட்டை நடத்தப்பட்டு வருவதாகவும் ஈரோடு ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்தில் 5 மணி நேரமாக சோதனை நடத்தினர். சோதனையில் இணை இயக்குநர் வேல்முருகன், துணை இயக்குநர் சந்திரமோகன் ஆகியோரிடமிருந்து கணக்கில் வராத ரூ.1லட்சத்து 2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

சோதனையின்போது அலுவலகத்தில் உள்ள குப்பைத்தொட்டிகளில் ஜவுளிக்கடைகள், மளிகைக்கடைகள், ஸ்வீட் கடைகளின் கிப்ட் வவுச்சர்கள் ஏராளமானவை கொட்டிக்கிடந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். போலீசார் அலுவலகத்திற்கு நுழைந்ததை கண்ட அதிகாரிகள் தங்களது மேஜைகள், பாக்கெட்டுகளில் வைத்திருந்த கிப்ட் வவுச்சர்களை அவசர அவசரமாக குப்பைத்தொட்டியில் போட்டு அதற்கு மேல் சில பேப்பர்களை கிழித்து போட்டு மறைத்திருப்பது தெரியவந்தது. இந்த அலுவலகத்தில் லஞ்சம் வாங்கி கொடுக்கும் புரோக்கராக அமர்நாத் என்பவர் செயல்பட்டு வந்துள்ளார். அமர்நாத் மற்றும் வேல்முருகன், சந்திரமோகன் ஆகியோரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: