ஏசியான் உறுப்பு நாடுகளுடன் உறவை மேம்படுத்த அதிக முக்கியத்துவம்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

புதுடெல்லி: ‘‘அனைத்து துறைகளிலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதற்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது,’’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தென்கிழக்கு நாடுகளின் ‘ஏசியான்’ அமைப்பில் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா உள்ளிட்ட 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பிராந்தியத்தின் வலிமைமிக்க இந்த அமைப்பின் பேச்சுவார்த்தைக்கான உறுப்பினர் நாடுகளாக அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. இதன் 17வது உச்சி மாநாடு நேற்று நடந்தது.

இதில், டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி பேசியதாவது: ஏசியான் நாடுகளுடன் அறிவியல், பொருளாதாரம், சமூகம், டிஜிட்டல், நிதி, கடல்சார் தொடர்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, ராணுவம் உள்ளிட்ட பிரிவுகளில் இந்தியா அதன் உறவை வலுப்படுத்தி உள்ளது. பிராந்தியத்தின் பாதுகாப்பு, வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்த, பதிலளிக்க கூடிய ஏசியான் அமைப்பு தேவை என்பதில் உறுப்பினர் நாடுகள் உறுதியாய் இருக்கின்றன. இந்தியாவின் இந்தோ-பசிபிக் பெருங்கடல் திட்டத்திற்கும், ஏசியான் அமைப்பின் இந்தோ-பசிபிக் கண்ணோட்டத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இந்த உச்சி மாநாடு ஏசியான் உறுப்பினர் நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று நம்புகிறேன். இவ்வாறு மோடி பேசினார்.

* ஆயுர்வேத கல்வி நிறுவனங்கள் நாட்டுக்கு இன்று அர்ப்பணிப்பு

ஆயுர்வேத அமைச்சகம் தோற்றுவிக்கப்பட்ட தினம் ஆயுர்வேத தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 5வது தேசிய ஆயுர்வேத தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, ஜாம்நகரில் உள்ள கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஐடிஆர்ஏ), ஜெய்ப்பூரில் உள்ள தேசிய ஆயுர்வேத  நிறுவனம் (என்ஐஏ) ஆகிய புகழ் பெற்ற இரண்டு ஆயுர்வேத கல்வி நிறுவனங்களை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதில், ஐஆர்டிஏ. 12 துறைகளுடனும், 3 ஆய்வகங்களுடன் செயல்படுகிறது. 175 ஆண்டு பாரம்பரியமிக்க என்ஐஏ.க்கு விரைவில் நிகர்நிலை பல்கலைக் கழக அந்தஸ்து வழங்கப்பட உள்ளது.

Related Stories: