சென்னை சவுகார்பேட்டை பகுதியில் பயங்கரம்: நிதி நிறுவன அதிபர் உள்பட 3 பேர் சுட்டுக்கொலை: சொத்துக்காக கொலை நடந்ததா என விசாரணை

சென்னை: சென்னை சவுகார்பேட்டை பகுதியில் பைனான்ஸ் அதிபர், மனைவி, மகன் ஆகியோர் நேற்று இரவு சுட்டுக் கொல்லப்பட்டனர். சொத்துக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்தச் சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சவுகார்பேட்டை விநாயகம் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தலில்சந்த்(74). ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் சென்னையில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு புஸ்பாபாய்(70) என்ற மனைவியும், ஷீத்தல்(40) என்ற மகனும், பிங்க் என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு நீண்ட நேரம் தலில் சந்த் வீட்டுக்கு அவரது மகள் பிங்க் போன் செய்துள்ளார். ஆனால் போனை யாரும் எடுக்கவில்லை.

இதனால் சந்தேகத்தில், வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. இதனால் உள்ளே சென்று பார்த்தபோது, தலில் சந்த், புஸ்பா பாய், ஷீத்தல் ஆகியோர் சோபாவில் சுட்டு கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். 3 பேரின் நெற்றியில் குண்டு பாய்ந்துள்ளது.

இதுகுறித்து யானைகவுனி போலீசாருக்கு பிங்க் தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் அருண், இணை கமிஷனர் பாலகிருஷ்ணன், பூக்கடை துணை கமிஷனர் மகேஷ்வரன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். கொலையாளிகளின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விசாரணை நடத்தியதில் சொத்து தகராறு காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த பகுதியில் பெரும்பாலும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் குடியிருந்து வருகிறார்கள். தற்போது சென்னையில் துப்பாக்கி சூடு சம்பவம் அதிகரித்து உள்ளது. ஒரே வீட்டில் 3 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் சவுகார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீத்தல், திருமணமாகி மனைவியை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இதனால் குடும்பத்தகராறு காரணமாக மனைவியின் சகோதரர்கள் இந்தக் கொலையை செய்திருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கொலை நடந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொலையாளிகள் சென்னையை விட்டு வெளியேறி விடாமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் பைனான்ஸ் அதிபர் துப்பாக்கியில் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் துப்பாக்கிச்சூடு சம்பவம் வடமாநிலத்தில்  தான் சாதாரணமாக நடைபெறும். தற்போது சென்னையில் நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: