புதுச்சேரி அருகே வாத்து பண்ணையில் போதை பொருள் கொடுத்து 5 சிறுமிகளை கட்டிப்போட்டு கூட்டு பலாத்காரம்: உரிமையாளர், மகன் உட்பட 6 பேர் போக்சோவில் கைது

புதுச்சேரி: புதுச்சேரி அருகே வாத்து பண்ணையில் 5 சிறுமிகளை கட்டிப்போட்டு, கூட்டு பலத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக உரிமையாளர், அவரது மகன் உட்பட 6 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி வில்லியனூர் அடுத்த கீழ் சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (53), இவர் கோர்க்காடு ஏரிக்கரையில் வாத்து பண்ணை வைத்துள்ளார். இங்கு வேலை செய்யவும், பிறபகுதிகளுக்கு தோட்ட வேலைக்கு அனுப்பி வைக்கவும், வெளியூரில் இருந்து சிறுமிகள் உட்பட பலரை கொத்தடிமைகளாக அழைத்து வந்து பணியில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.

இப்பணியில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சில குடும்பத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் 7 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகளும் அடங்குவர். இவர்களை திருச்சிறம்பலம் கூட்ரோடு, வானூர், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாத்து மேய்க்க அனுப்பியுள்ளார். சம்பவத்தன்று தமிழக பகுதியில் இரு சிறுமிகள் வாத்து மேய்ப்பதை கண்ட சமூக ஆர்வலர், அவர்களை மீட்டு புதுச்சேரியில் உள்ள குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவர்களிடம் ஆதார்கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளனர். ஆனால் தங்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை, எங்களைபோல பல சிறுமிகளை வீட்டில் அடைத்து பண்ணைத்தொழிலுக்கு பயன்படுத்துவதாகவும், தங்களை பலர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்தனர்.

இதுகுறித்து குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரனிடம் புகார் அளிக்கப்பட்டது. அவரது தலைமையிலான குழுவினர் அந்த வாத்துப்பண்ணைக்கு ஆய்வுக்கு சென்றபோது, அங்கிருந்த கன்னியப்பன் மனைவி சுபா, சிறுமிகளை வீட்டில் மறைத்து வைத்து, இங்கு யாரும் இல்லையென கூறியிருக்கிறார். சந்தேகமடைந்த நலக்குழு, காவல்துறை உதவியுடன் சுபாவை பிடித்து விசாரணை நடத்தியது. இதில் மேலும் 3 சிறுமிகளை வீட்டில் அடைத்து வைத்திருப்பதை ஒப்புக்கொண்டார். பின்னர் அந்த சிறுமிகளை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரூ.3 ஆயிரத்துக்கு வாத்து மேய்க்க கொத்தடிமைகளாக வைத்திருந்ததும், அவர்கள் இருளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இந்நிலையில் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமிகள் பண்ணையில் வைத்து தங்களை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாகவும், பலர் கூட்டு பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்தனர். ஒரு அறையில் வைத்து பூட்டி விடுவதோடு, சாப்பாடு மட்டும் கொடுக்கப்படும், மற்றபடி அவர்கள் வெளியில் செல்ல அனுமதியில்லை. அவர்களை தொடர்ந்து மறைத்தே வைத்துள்ளனர்.

கன்னியப்பன் உட்பட பலரும் சிறுமிகளை கஞ்சா, மது, போதைபொருட்கள் கொடுத்து தொடர்ந்து பலாத்காரம் செய்து சீரழித்துள்ளனர். திரைப்படங்களில் வருவதை போன்று சிறுமிகளை கட்டி வைத்து சிறுவர்கள் உட்பட 14 பேர் கூட்டு பலத்காரம் செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து பல நாட்கள் இப்படியே செய்து வந்ததால், அந்த சிறுமிகள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களுக்கு கவுன்சலிங் அளிக்கப்பட்டு வருகிறது. பலாத்காரத்தால் ஒரு சிறுமி கர்ப்பமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து குழந்தைகள் நலக்குழுவினர் மங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேற்கு எஸ்பி ரங்கநாதன் மேற்பார்வையில் சப்- இன்ஸ்பெக்டர் சரண்யா விசாரணை நடத்தினார். முதற்கட்டமாக, சிறுமிகள் அடையாளம் காட்டிய கீழ்சாத்தமங்கலத்தை சேர்ந்த வாத்து பண்ணை உரிமையாளர் கன்னியப்பன், அவரது மகன் ராஜ்குமார்(27), உறவினர்கள் பசுபதி(24), பண்ணை ஊழியர்கள்  ஐயனார்(23), சிவா(22), மூர்த்தி(20) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள மேலும் பலரை தேடி வருகின்றனர்.

* சிறப்பு விசாரணை குழுக்கள் அமைப்பு

சீனியர் எஸ்பி பிரதிக்‌ஷா கொடரா அளித்த பேட்டி: சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய வழக்கில், 6 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது போக்சோ சட்டம் பிரிவு 6(12), குற்றவியல் சட்டம் 376 ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்பியோடியவர்களை பிடிக்க ஐபிஎஸ் அதிகாரி திவ்யா தலைமையில் இரண்டு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிகளை மருத்துவ பரிசோதனை, சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுமிகள் பல ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இத்தகைய கொடூரமான சட்டவிரோத செயல்களை அறிந்தவர்கள், அதிகாரிகளுக்கு தெரிவிக்க முன்வரவில்லை. எனவே செங்கல்சூளை, செம்மறி ஆடு, கோழிப்பண்ணை, பண்ணை வீடு, கரும்பு வயல் போன்றவற்றில் குழந்தை தொழிலாளர்கள், சிறுவர்கள் கொடுமைப்படுத்தப்படும் சம்பவங்களை பொதுமக்கள் கவனித்தால், காவல் கட்டுப்பாட்டு அறை- 100, சைல்ட் லைன் 1091, 1031, 112 ஆகிய எண்களின் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: