ஒரே வழியாக செல்வதால் குமுளியில் கடும் போக்குவரத்து நெரிசல்: கம்பம்மெட்டு வழியாக வாகனங்களை அனுமதிக்க கோரிக்கை

கம்பம்: கேரளாவுக்கு ஏல தோட்டங்களுக்கு செல்லும் ஜீப் வாகனங்கள் ஒரே வழியாக செல்வதால் குமுளியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே கம்பம்மெட்டு வழியாக தொழிலாளர் வாகனங்களை அனுமதிக்க தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் உத்தமபாளையம், சின்னமனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து எல்லை பகுதியான கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏல தோட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் ஜீப் மூலம் நாள்தோறும் சென்று வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று பொதுமுடக்கம் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு தொழிலாளர்கள் வர தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஏல விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் கடந்த இரண்டு மாதங்களாக தளர்வுகளுடன் கூடிய ஆறு மாத ரெகுலர் பாஸ் வழங்கப்பட்டது. ஆனால் குமுளி வழியாக மட்டுமே அனைத்து ஜீப் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இதனால் குழித்தொழு, கொச்சரா, புற்றடி, வண்டன்மேடு, கட்டப்பனை, நெடுங்கண்டம் பகுதியிலுள்ள ஏல தோட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எரிபொருள் செலவு, பயணநேரம், பொருள் விரயம் ஏற்படுகிறது.

குமுளியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கேரள சோதனைச்சாவடியை கடந்து செல்லும் போது  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தோட்டங்களுக்கு விரைவாக செல்ல வாகனங்கள் அதிவேகமாகவும், ஒருவரை ஒருவர் முந்தி செல்வதாலும் விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே குமுளியில் வாகன நெரிசலை தடுக்க கம்பம்மெட்டு வழியாக தொழிலாளர் வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஏலத்தோட்ட விவசாயி கருப்பணன் கூறுகையில், ‘அனைத்து வாகனங்களும் குமுளி வழியாக செல்வதால் தான் பிரச்னை.

குழித்தொழு, கொச்சரா, புற்றடி, வண்டன்மேடு, கட்டப்பனை, நெடுங்கண்டம் பகுதியிலுள்ள ஏல தோட்டங்களுக்கு கம்பம்மெட்டு வழியாக வாகனங்களை அனுமதித்தால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து தவிர்க்கப்படும். தேனி-இடுக்கி மாவட்ட நிர்வாகத்தினர் கலந்து பேசி ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றார்.

Related Stories: