பரங்கிப்பேட்டை வட்டார பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் கருகும் பயிர்கள்-பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

புவனகிரி :  காவிரி டெல்டா பாசனத்தின் கடைமடை பகுதியாக விளங்குவது புவனகிரி தாலுகா பகுதியாகும். இந்த தாலுகாவில் உள்ள பெரியப்பட்டு கிராமம் வரை வீராணம் ஏரியின் தண்ணீர்தான் பாசன ஆதாரம். ஆனால் கடந்த சில வாரங்களாகவே பாசனத்திற்கு போதிய அளவு தண்ணீர் வரவில்லை. பாசன வாய்க்கால்கள் சில தூர்வாரப்பட்டாலும், தண்ணீர் வராமலும் காய்ந்து கிடக்கிறது.

பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வராததால், விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. வழக்கமாக இந்த கால கட்டத்தில் நன்றாக மழை பெய்யும். அதனால் தண்ணீர் பஞ்சம் இருக்காது. பாசன வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கும்.ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இதுவரை துவங்கவில்லை. மழை பெய்யாததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் வீராணம் ஏரியில் இருந்தும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை. இதனால் பரங்கிப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் காய்ந்து, கருகி வருகிறது.

தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகியதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். சில விவசாயிகள் கடன் வாங்கி மோட்டார் வைத்து தண்ணீரை இறைத்து பயிர்களுக்கு பாய்ச்சுகின்றனர்.

இதற்கு கூடுதல் பணம் செலவாகும் என்பதால் எல்லா விவசாயிகளாலும் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகிறது. உடனடியாக வீராணம் ஏரியிலிருந்து கடைமடை வரை எளிதாக தண்ணீர் செல்லும் வகையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: