பசும்பொன் தேவர் தங்கக்கவசம் மதுரை வங்கியில் ஒப்படைப்பு

சாயல்குடி / மதுரை : பசும்பொன் தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கக்கவசம் நேற்று களையப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை வங்கியில் ஒப்படைக்கப்பட்டது.கடந்த 2014ம் ஆண்டு அரசு சார்பில் 13.5 கிலோ எடையுள்ள தங்கக்கவசம், ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது. ஆண்டுதோறும் நடந்து வரும் குருபூஜை விழாவிற்காக தங்ககவசம் அணிவிக்கப்பட்டு, மதுரை அண்ணா நகரில் உள்ள தேசிய வங்கியில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்படுகிறது.

இந்த ஆண்டு தேவரின் 113வது ஜெயந்தி விழா, 58ம் ஆண்டு குருபூஜை விழாவிற்காக கடந்த அக்.23ம் தேதி மதுரையிலிருந்து கொண்டு வரப்பட்ட தங்கக்கவசம் தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது, குருபூஜை விழா கடந்த அக்.30ம் தேதி முடிந்த நிலையில், 14 நாட்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. நேற்று காலையில் தங்கக்கவசம் களையப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை வங்கிக்கு கொண்டு வரப்பட்டது.

தங்ககவசத்தை ஒப்படைக்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாள் இருவரும் நேற்று வங்கிக்கு வந்தனர். பின் இருவரும் தங்கக்கவசத்தை வங்கி அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.நிகழ்ச்சியில், அமைச்சர் உதயகுமார், கலெக்டர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் விசாகன், எம்எல்ஏக்கள் ராஜன்செல்லப்பா, மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: