கொரோனாவால் சென்னையில் இருந்து இடம் பெயர்ந்த லட்சக்கணக்கானோருக்கு சொந்த ஊரில் வாக்குரிமை: ஆலோசனை கூட்டத்தில் அரசியல் கட்சிகள் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் வருகிற 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டம் தலைமைசெயலகத்தின் 2வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று காலை 11.30 மணிக்கு நடந்தது. இக்கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ். பாரதி, என்.ஆர்.இளங்கோவன் எம்பி, அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், காங்கிரஸ் மாநில துணை தலைவர் தாமோதரன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் நவாஸ், பாஜ நிர்வாகிகள் காளிதாஸ், கிருஷ்ணகுமார், இந்திய கம்யூனிஸ்ட் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுக நயினார், ராஜசேகர், தேமுதிக துணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, இளைஞர் அணி செயலாளர் நல்லதம்பி, திரிணாமுல் காங்கிரஸ் மாநில தலைவர் கலைவாணன், பொதுச்செயலாளர் வடிவேல் உள்ளிட்ட 9 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது, இரட்டை பதிவுகளை நீக்குவது, வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்துவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

கூட்டத்துக்கு பின்னர் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறியதாவது:

திமுக சார்பில் 3 மனுக்களை தேர்தல் ஆணையரிடம் கொடுத்துள்ளோம். அந்த மனுக்களில், வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் நேர்மையாகவும், நியாயமான முறையில் இருக்க வேண்டும். கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதெல்லாம் வரும் சட்டசபை தேர்தலில் தவிர்க்கப்பட வேண்டும். வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள பெயர்கள், அந்தெந்த முகவர்களின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டு தான் நீக்கப்பட வேண்டும். காரணம், எங்களுக்கு கிடைத்த தகவலின் படி மன்னார்குடியில் ஆளும் கட்சியை சார்ந்த எம்பி ஒருவர் தங்களது லெட்டர் பேடில் எந்தெந்த பெயர்களை நீக்க வேண்டும் என்று எழுதி கொடுத்து இருப்பதாக புகார் வந்துள்ளது. எனவே வாக்காளர் பெயர்களை நீக்கக் கூடாது. முகவர் ஒப்புதல் உடன் தான் நீக்க வேண்டும்.

இந்த கொரோனா காலக்கட்டங்களில் லட்சக்கணக்கானோர் சென்னையில் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்களது வாக்குரிமை மறுக்கப்படக்கூடாது. அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்க வேண்டும். ஆகவே அவர்களுக்கு உரிய வாக்குரிமை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கையை செய்ய வேண்டும். அதற்கு தேர்தல் ஆணையர், ஆன்லைன் மூலம் ஏறத்தாழ 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அப்போது, நாங்கள், ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் படித்தவர்கள். ஆனால், எந்த வசதியும் இல்லாத பாமர மக்கள் லட்சக்கணக்கானோர் வாக்குரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அதை தேர்தல் ஆணையர் பரிசீலிப்பதாக கூறியுள்ளார். கடந்த 3 நாட்களாக மறைந்த தலைவர் கலைஞர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி ஆதாரமற்ற மற்றும் சட்டம் ஓழுங்கு பிரச்னை ஏற்படுத்தக்கூடிய வகையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. தேர்தல் வருவதற்கு முன்பாக இப்படி அவதூறான போஸ்டர் ஒட்டியதற்கு சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளோம். தெரியும் என்றார்.

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது: இந்தாண்டு இதுவரை 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க, நீக்க, முகவரி மாற்ற விண்ணப்பித்துள்ளனர். அதுவும், ஆன்லைன் மூலம் 80 சதவீதம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதிமுக சார்பில் கொரோனா காரணமாக வீடு மாறிய வாக்காளர்களை சேர்ப்பதற்கு அதிக வாய்ப்பு கொடுத்து குறுகிய காலத்தில் புதிய முகவரிகளை அவர்கள் பெயர்களை சேர்க்க வேண்டும். அதை பரிசீலிப்பதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர். வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தங்களுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முயற்சிக்கும் போது, அதையும் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது தொடர்பாக சிறப்பு முகாம் நடத்துவது குறித்து அறிவிப்பை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: