மன்னர் காலத்தில் வாணிபத்துக்கு அடையாளமாக திகழ்ந்தது: லீ புரம் கலங்கரை விளக்கம் சீரமைக்கப்படுமா?

அஞ்சுகிராமம்: சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது லீபுரம் கடற்கரை கிராமம். கன்னியாகுமரி முக்கடல் - வட்டக்கோட்டைக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த கிராமம் அமைந்து உள்ளது. லீ புரம் கிராம பகுதியில் சிறிய அளவிலான துறைமுகம் செயல்பட்டு வந்தது. இதற்கு சான்றாக இன்றளவும் அந்தப் பகுதியில் சிறிய அளவிலான கலங்கரை விளக்கம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் லீபுரம் கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக தோணியில் வாணிபம் நடந்து உள்ளது. அதிலும் குறிப்பாக இலங்கைக்கு கருப்பட்டி, புகையிலை போன்ற பொருட்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.

மீண்டும் இலங்கையில் இருந்து வரும் தோணிகளுக்கு கடற்கரையை அடையாளம் காட்டுவதற்காக இந்தக் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 30 அடி உயரம் உள்ள கலங்கரை விளக்கத்தின் உச்சியில் பெரிய அளவிலான எண்ணெயில் எரியும் விளக்கு ஏற்றப்படுமாம். இந்த அடையாளத்தைக் கொண்டு வியாபாரத்திற்கு சென்றவர்கள் மீண்டும் ஊர் வந்து சேருவார்கள். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த வியாபாரம் நடந்து வந்துள்ளது. அதுவரை கலங்கரை விளக்கமும் செயல்பாட்டில் இருந்துள்ளது. அதன் பிறகு செயல்பாடு குறைந்துள்ளது. ஆனால் கடல் வாணிபம் நடந்ததற்கு சாட்சியாக கலங்கரை விளக்கம் தற்போது வரை நின்று கொண்டிருக்கிறது.

பழங்கால நினைவு சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் 2010ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் லீ புரத்தில் உள்ள இந்த கலங்கரை விளக்கத்தை மறு சீரமைப்பு செய்து உள்ளது. பல ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் தற்போது இதை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.இது குறித்து சமூக ஆர்வலர் அழகை எஸ்எஸ் மணி கூறுகையில், மன்னர் ஆட்சி காலத்திற்கு பிறகு லீ புரத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தை யாரும் பராமரிக்க முன்வரவில்லை. தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. இன்னும் நாள் ஆக ஆக இருந்த இடம் தெரியாமல் போக வாய்ப்பு உள்ளது.

சுற்றுலாத் தலங்களுக்கு அருகில் இருப்பதால் இதை பராமரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் பழைய கலாசாரத்தை மக்களுக்கு எடுத்துரைக்கவும், சுற்றுலாப் பயணிகளை கவரவும் முடியும். பாரம்பரிய நினைவுச் சின்னமான கலங்கரை விளக்கத்தைச் சீரமைக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது என்றார்.

Related Stories: