பாலாறு மேம்பாலத்தில் கடும் சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பாலாற்றில் உள்ள மேம்பாலத்தில், சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து பள்ளமாகி, இரும்பு கம்பிகள் வெளியில் தெரிகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் மேம்பாலத்தை கடந்துசெல்கின்றனர். சிலர், நிலைதடுமாறி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பாலாற்றின் குறுக்கே சுமார் 13 ஆண்டுகளுக்கு முன் மேம்பாலம் கட்டப்பட்டது. அதற்கு முன் புழக்கத்தில் இருந்த தரைப்பாலம், கீழம்பி வழியாக வேலூர் செல்லும் புறவழிச்சாலைக்கான பாதையாக மாற்றப்பட்டது. இந்த மேம்பாலத்தின் வழியாக செய்யாறு, ஆரணி, திருவண்ணாமலை, வந்தவாசி, திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, சேலம், மதுரை, புதுச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், சென்று வருகின்றன.

மேலும், செய்யாறு சிப்காட் அமைந்துள்ள மாங்கால் கூட்ரோடுக்கு செல்லும் கனரக வாகனங்களும் இந்த பாலத்தின் வழியாகவே செல்கின்றன. இதனால் மேம்பாலத்தின் வழியாக கனரக வாகனங்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள பல்வேறு தொழிற்சாலைக்கு செல்லும் ஆயிரக்கணக்கானோர் கார், பைக், ஆட்டோ என பல வாகனங்களில் செல்கின்றனர். இந்நிலையில், இந்த பாலத்தின் இணைப்பு பகுதியில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, பள்ளம் ஏற்பட்டு, அதில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியில் தெரிகின்றன. இதனால், வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், பைக்கில் செல்பவர்கள் நிலைதடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஏற்கனவே இந்த பாலத்தின் இணைப்புகளை சரியாக இணைக்ககாமல், தனித்தனியாக பிரிந்ததுபோல் தெரிந்தது. அப்போது அதிகாரிகள் வந்து இணைப்பில் தார் ஊற்றி சரிசெய்தனர். அதில், சில இடங்களில் சிமென்ட் கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரிந்தன. அதையும் சரிசெய்தனர். ஆனால், மீண்டும் சில வாரங்களில் பாலம் சேதமடைந்துள்ளது. அதனை அதிகாரிகள், முறையாக ஆய்வு செய்து, பாலத்தை சரியாக சீரமைக்க வேண்டும் என்றானர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மேம்பாலத்தை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: