ஏழுமலையான் கோயிலில் சமூக இடைவெளியின்றி இலவச தரிசன டிக்கெட் வாங்க கடும் குளிரில் குவிந்த பக்தர்கள்: ஆன்லைனில் வழங்க கோரிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இலவச தரிசன டிக்கெட் வாங்குவதற்காக, கடும் குளிரிலும் சமூக இடைவெளி இன்றி பக்தர்கள் குவிந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய தினமும் 3 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். திருப்பதி அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ் மையத்தில் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 3 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படுவதால், இதை பெற ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர். காலை 6 மணிக்கு கவுன்டர்கள் திறக்கப்பட்டு டிக்கெட் வழங்கப்படுகிறது. ஆனால், பக்தர்கள் முதல் நாள் இரவே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வரிசையில் காத்திருக்கின்றனர். .

இதில், பெரும்பாலான பக்தர்கள் முகக்கவசம் இன்றியும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் உள்ளனர். இதனால், கொரோனா பரவும் அபாயம் உள்ளது. பலர் கைக்குழந்தைகளுடன் கடும் பனியில் தவிக்கின்றனர்.

இலவச தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் திருப்பதிக்கு வருகின்றனர். ஒரு நாளைக்கு 3 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படுவதால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் டிக்கெட் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பலர் ஏமாற்றத்துடன் திரும்பியும் செல்கின்றனர். சிறப்பு தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ரூ.300 டிக்கெட் ஆன்லைன் மூலம் வழங்கப்படுகிறது. அதேபோல், கொரோனாவை தடுக்கும் வகையிலும், வெளியூர் பக்தர்களின் வசதிக்காகவும் இலவச தரிசன டிக்கெட்டுகளையும் ஆன்லைன் மூலம் வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரியுள்ளனர்.

Related Stories:

>