பாஜவுடன் கருத்தியல் ரீதியாக வாதாட தயார்: திருமாவளவன் பேச்சு

சென்னை: பாஜவுடன் கருத்தியல் ரீதியாக வாதாட தயாராக இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். திட்டமிட்டு அவதூறு பரப்பும் பாஜவை கண்டித்து விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. விசிக தலைவர் திருமாவளவன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பாஜவிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின்போது திருமாவளவன் பேசியதாவது: கடந்த 10 நாட்களில் மட்டும் 3 போராட்டங்களை விசிக நடத்தியுள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் நூல்களை யார் எழுதியிருந்தாலும் அதை தடை செய்ய வேண்டும்.

திமுக கூட்டணியை பலவீனப்படுத்தவும், திமுக ஆட்சியை கைப்பற்றக்கூடாது என்பதற்காகவே குழப்பம் செய்கின்றனர். தேர்தலை கூட புறக்கணித்துவிட்டு கருத்தியியல் ரீதியாக பாஜவுடன் வாதாட எப்போதும் நாங்கள் தயாராக இருக்கிறோம். வழக்குகளுக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் கிடையாது. மனுதர்மம் படித்தால் அனைவரும் திருமாவளவனை ஆதரிப்பார்கள். தமிழ்நாட்டை வன்முறை காடாக மாற்ற பாஜ திட்டமிட்டிருக்கிறது. கலகம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் திட்டமிட்டு நடத்தப்படும் பாஜவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது. இவ்வாறு பேசினார்.

Related Stories: