நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது: பாளை சிவன் கோயிலிலும் கொடியேற்றம்

நெல்லை: நெல்லை சுவாமி நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. நெல்லை சுவாமி நெல்லையப்பர்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஐப்பசி திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டு மார்ச் இறுதியில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோயிலுக்குள் சுமார் 6 மாதம் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனித்தேர் திருவிழா உள்ளிட்ட முக்கிய திருவிழா நிகழ்ச்சிகள் கோயிலுக்கு உள்ளேயே நடத்தப்பட்டு  இணையதளம் மூலம் நேரடிஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை வழக்கமானமுறைப்படி நடத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்து முன்னனியினரும் கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தினர். இதையடுத்து முத்தரப்பு பேச்சுவார்த்தையில் திருக்கல்யாண திருவிழாவை கோயிலுக்குள் நடத்தவும் அனைத்து நிகழ்ச்சிகளையும் கோயில் நிர்வாகம் சார்பில் யூடியுப்பில் நேரடி ஒளிபரப்பு செய்யவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலில் அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சியும் பந்தல்காலும் நடப்பட்டது. தொடர்ந்து காலை 5.30 மணிக்கு அம்மன் சன்னதியில் வைத்து திருக்கொடியேற்றம் வழக்கமான ஆகமவிதிகளின்படி நடத்தப்பட்டது.

கொடி மரத்திற்கு சிறப்பு தீபாரதனைகள் நடந்தன.  இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து ஐப்பசி திருவிழா நிகழ்ச்சிகளை பக்தர்கள் நேரில் காண அனுமதி இல்லை. தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்படும். வருகிற 10ம் தேதி சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் மற்றும் 11ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் ஆயிரம் கால் மண்டபத்தில் திருக்கல்யாண  நிகழ்ச்சிகளையும் கோயிலுக்குள் நடத்த நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இவற்றை பக்தர்கள் நேரில் பார்க்க அனுமதி இல்லை. ஆனால் கோயில் நிர்வாகம் நேரடி ஒளிபரப்பு செய்யும்.

இதுபோல் பாளை திரபுராந்தீஸ்வரர் கோயிலிலும் இன்று காலை 8 மணிக்கு ஐப்பசி திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி ஆகமவிதிகளின்படி நடந்தது. இதில் பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து விழா நிகழ்ச்சிகளை முறைப்படி நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

Related Stories: