வெளியே செல்ல திடீர் தடை பரூக் அப்துல்லாவுக்கு மீண்டும் வீட்டுக்காவல்?

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லாவை நேற்று வெளியே செல்ல முயன்றபோது, போலீசார் அவரை தடுத்து வீட்டுக்குள் முடக்கினர்.  இது பற்றி தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் நேற்று கூறுகையில், ‘‘மிலாது நபியை முன்னிட்டு  ஹஸ்ரத்பால் மசூதிக்கு தொழுகை நடத்த பரூக் அப்துல்லா புறப்பட்டார். ஆனால், அவரை வீட்டை விட்டு வெளியே செல்ல விடாமல் போலீசார் தடுத்தனர். இது, அவரை மீண்டும் வீட்டுக்காவலில் வைக்கும் முயற்சியாக தெரிகிறது,’’ என்றார். ஜம்மு காஷ்மீரில் ரத்து செய்யப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கொண்டு வரும் முயற்சிக்காக, காஷ்மீரின் பிரதான 7 எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, ‘குப்கர் பிரகட மக்கள் கூட்டணி,’ என்ற அமைப்பை பரூக் அப்துல்லா சமீபத்தில் தொடங்கினார்.  

இக்கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் சஜத் லோன் கூறுகையில், ‘‘அரசின் இந்த அடக்குமுறையை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையையே தட்டிப் பறிக்கும் இந்த செயல், ஏற்றுக் கொள்ள முடியாதது. தனது மதரீதியான வழிபாட்டில் ஈடுபடுவதற்கு பரூக் அப்துல்லாவை அனுமதித்திருக்க வேண்டும். ஜம்மு காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகள் இப்படித்தான் பறிக்கப்படுகிறது,’’ என்றார். 3 பாஜ.வினர் சுட்டுக்கொலை: இதற்கிடையே காஷ்மீர் பள்ளத்தாக்கின் குல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பிடா உசேன், உமர் ஹஜாம், உமர் ரசீத் பேக் ஆகிய 3 பாஜ நிர்வாகிகள் கொல்லப்பட்டனர். கடந்த 6 மாதங்களில் இதுபோல் 14 பேர் கொல்லப்பட்டதால் அக்கட்சியினர் பீதி அடைந்துள்ளனர். 3 பாஜ நிர்வாகிகள் கொல்லப்பட்டதற்கு, லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான, ‘டிஆர்எப்’ பொறுப்பேற்றுள்ளது.

Related Stories: