‘தமிழகம் மீட்போம்’ எனும் தலைப்பில் சட்டப்பேரவை தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடக்கிறது

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி மூலமாக ‘தமிழகம் மீட்போம்’ எனும் தலைப்பில் சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக  சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க திமுக முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மண்டல வாரியாக திமுக நிர்வாகிகளுடன் 4 நாட்கள் காலை, மாலை என்று  சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், பொறுப்பாளர்களின் கருத்துக்களை  மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும் தொகுதி நிலவரம், திமுக வெற்றி வாய்ப்பு, வேட்பாளராக யாரை நிறுத்துவது, திமுகவின் பலம் எவ்வாறு உள்ளது?, உள்ளிட்டவை குறித்து மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

மேலும் ஆளும் அதிமுக அரசின் மக்கள் விரோத சட்டங்கள், திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். மேலும் மாணவர்களுக்கு அதிமுக அரசு செய்துள்ள துரோகங்கள் மக்களிடம் எடுத்து சொல்லி விளக்க வேண்டும் என்று  அப்போது அவர் அறிவுரை வழங்கினார். அடுத்த கட்டமாக சிறப்பு பொதுக்கூட்டம் மூலமாக மு.க.ஸ்டாலின் மாவட்டம் வாரியாக பேச உள்ளார். இது குறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  பல்வேறு மாவட்டங்களில் முப்பெரும் விழாக்களில் காணொலிக் காட்சி மூலமாக கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து, “தமிழகம் மீட்போம்!” எனும் தலைப்பிலான “2021-சட்டமன்றத் தேர்தலுக்கான சிறப்புப் பொதுக்கூட்டங்கள்” நடைபெறும்.  மாவட்டங்களுக்கு உட்பட்ட திமுக மாவட்டங்களை ஒருங்கிணைத்து நடைபெறும்.

வருகிற 1ம் தேதி ஈரோடு, 2ம் தேதி - புதுக்கோட்டை (முத்தமிழறிஞர் கலைஞர் சிலை திறப்பு விழா), 3ம் தேதி-விருதுநகர், 5ம் தேதி-தூத்துக்குடி, 7ம் தேதி-வேலூர், 8ம் தேதி-நீலகிரி, 9ம் தேதி-மதுரை, 10ம் தேதி-விழுப்புரம் வருவாய்  மாவட்டங்களுக்கு உட்பட்ட  திமுக மாவட்டங்களை ஒருங்கிணைத்து சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெறும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: