திமுக மருத்துவர் அணி டாக்டர் தற்கொலை விவகாரத்தில் டி.எஸ்.பி. பாஸ்கரனிடம் விசாரணை தொடக்கம்; வழக்கு பதிவு செய்யப்படுமா?

நாகர்கோவில்: நாகர்கோவிலை அடுத்த பறக்கை அருகே இலந்தவிளை பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சிவராம பெருமாள் (43). பறக்கையில் மருத்துவமனை நடத்தி வந்தார். திமுக மருத்துவரணி மாவட்ட துணை அமைப்பாளராகவும் இருந்தார். நேற்று முன்தினம் திடீரென சிவராம பெருமாள் விஷம் குடித்து தற்கொலை செய்தார். இவர் தற்கொலை தொடர்பாக பரபரப்பு கடிதம் மற்றும் ஆடியோவும் வெளியாகி உள்ளது. அந்த கடிதத்தில் கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன், இலந்தவிளையை சேர்ந்த விஜய் ஆனந்த் ஆகியோர்தான் தனது தற்கொலைக்கு காரணம் என கூறி இருந்தார். ஆடியோ உரையாடலிலும் இதை பதிவு செய்துள்ளார். ஆனால் டி.எஸ்.பி. தரப்பில் சிவராம பெருமாள் யார் என்றே தெரியாது என கூறி உள்ளார்.

இந்த பிரச்சினை தொடர்பாக தற்போது திமுகவும் போராட்டத்துக்கு தயாராகி வருகிறது. சிவராம பெருமாள் தற்கொலைக்கு காரணமான டி.எஸ்.பி. மற்றும் விஜய் ஆனந்த் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு உரிய நடவடி–்க்கை எடுக்காவிட்டால், போராட்டம் நடத்துவோம் என சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., மாநகர செயலாளர் வக்கீல் மகேஷ் ஆகியோர் எஸ்.பி. யிடம் நேரடியாக வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த ஏ.டி.எஸ்.பி. மணிமாறன், ஏ.எஸ்.பி. விஸ்வேஸ் பி. சாஸ்திரி ஆகியோர் நியமிக்கப்பட்டு. அவர்கள் டி.எஸ்.பி. பாஸ்கரன் மற்றும் சிவராம பெருமாள் மனைவி, உறவினர்களிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இந்த விவகாரத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். ஆனால் அதில் யார், யார் இடம் பெறுகிறார்கள் என்பது பற்றி விசாரணைக்கு பிறகே தெரிய வரும் என போலீசார் கூறி உள்ளனர். யார் தவறு செய்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. பத்ரி நாராயணன் கூறி உள்ளார்.

டி.எஸ்.பி. செல்போன் அழைப்புகளை  ஆய்வு செய்ய வேண்டும்

திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூறுகையில், டி.எஸ்.பி. பாஸ்கரன் மிரட்டியதே தற்கொலைக்கு காரணம் என சிவராம பெருமாள் தெளிவாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். டி.எஸ்.பி.பாஸ்கரனை பணியில் வைத்துக்கொண்டு விசாரணை நடத்தினால் நியாயம் கிடைக்காது. டி.எஸ்.பி.யின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். சிவராம பெருமாளின் உரையாடல் மற்றும் கடிதத்தை முக்கிய சாட்சியமாக கருத வேண்டும் என்றனர்.

Related Stories: