சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 லட்சத்துக்கு கீழ் குறைந்தது

புதுடெல்லி: நாட்டில் தொடர்ந்து 5வது நாளாக, கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 லட்சத்துக்கு கீழ் குறைந்துள்ளது. மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா தொற்று காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,470 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 79,46,429 ஆக அதிகரித்துள்ளது. நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நோய் பாதித்த 488 பேர் இறந்ததை அடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,19,502 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்த 72,01,070 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர். தேசியளவில் குணமடைந்தோர் சதவீதம் 90.62 ஆக உள்ளது. உயிரிழப்பு சதவீதமானது 1.50 ஆக உள்ளது. கடந்த 5வது நாளாக கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 7 லட்சத்துக்கும் கீழ் உள்ளது. தற்போது, நாடு முழுவதும் நோய் பாதித்த 6,25,857 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* 10.44 கோடி பேர்பரிசோதனை

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையின்படி, கடந்த 24ம் தேதி வரை 10 கோடியே 44 லட்சத்து 20 ஆயிரத்து 894 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், நேற்று முன்தினம் ஒரே நாளில் 9,58,116 பேருக்கு பரிசோதனை  செய்யப்பட்டுள்ளது.

* மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலேவுக்கு கொரோனா

மாநிலங்களவை எம்பி.யான இந்திய குடியரசு கட்சியின் தலைவர் ராம்தாஸ் அதவாலே, மத்திய சமூக நீதித் துறை அமைச்சராக உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் சீனாவில் கொரோனா பரவியிருந்தது. அப்போது, கொரோனா பரவலை   தடுப்பதற்காக மும்பை `கேட்வே ஆப் இந்தியா’வில் புத்தமதத்தினர் பிரார்த்தனை செய்தார்கள். அதில், அதவாலேவும் கலந்து கொண்டு, `கொரோனாவே ஓடிவிடு, கொரோனாவே ஓடி விடு’ என்று அவர்களுடன் சேர்ந்து கோஷமிட்டார். இது, மிகவும் பிரபலமானது. இந்நிலையில், அதவாலேவுக்கு நேற்று நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Stories: