நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ராணுவத்தினருக்காக தீபமேற்றுங்கள்

புதுடெல்லி: பிரதமர் மோடி ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி மூலம் மாதம் தோறும் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். நேற்று முன் தினம் ஒலிபரப்பான நிகழ்ச்சியில் சர்தார் பட்டேலின் பிறந்த தினம், இந்திரா காந்தியின் நினைவு தினம், உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பது என்று பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். மேலும் நவராத்திரி, தீபாவளி உள்பட பல பண்டிகை வாழ்த்துகள் தெரிவித்த பிரதமர் மோடி, நாட்டுக்காக ராணுவ வீரர்ககளின் தியாகத்தைப் போற்றும் வகையில் அனைவரும் தங்கள் வீடுகளில் தீபமேற்றுமாறும், ஒட்டு மொத்த நாடும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்பதையும் தீபத்தின் மூலம் தெரிவிப்போம் என்றார்.

இந்த பண்டிகை காலத்தில் உள்நாட்டு உற்பத்தி பொருட்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். இந்தியாவின் தயாரிப்புகள் மீது உலகம் தற்போது கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறது. தற்போது காதி பொருட்கள் மெக்சிகோவில் பிரபலமடைந்துள்ளன. கொரோனா சமயத்தில் காதி மாஸ்க்கை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி உள்ளனர். காந்தி ஜெயந்தி அன்று, டெல்லி கன்னாட்பிளேஸ் பகுதியில் உள்ள காதி கடையில் மட்டும் ஒரே நாளில் ₹1 கோடிக்கான விற்பனை நடந்துள்ளது. இவ்வாறு கூறினார்.

* தூத்துக்குடி மாரியப்பனுடன் தமிழில் உரையாடிய மோடி

‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் தூத்துக்குடியைச் சேர்ந்த பொன் மாரியப்பன் என்ற முடி திருத்துநருடனும் உரையாடினார் பிரதமர். தனது சலூனில் சிறிய நூலகம் ஒன்றை அமைத்து வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்து வருகிறார் பொன் மாரியப்பன். அவரிடம் மோடி தமிழில் உரையாடியதாவது:

பிரதமர்: ‘வணக்கம் மாரியப்பன் ஜி... நல்லாருக்கீங்களா’

மாரியப்பன்: ‘அய்யா வணக்கம்.. நலமாக இருக்கிறேன்’

பிரதமர்: ‘வணக்கம்.எப்படி இந்த எண்ணம் உங்களுக்கு வந்தது’

மாரியப்பன்: ‘என்னால படிக்க முடியாம போயிருச்சு. சரி மத்தவங்க படிக்கறதுக்காகவாவது நாம ஒரு தூண்டுகோலா இருக்கலாமேன்னு இந்த முயற்சியை செய்றேன்’

பிரதமர்: ‘உங்களுக்குப் பிடிச்ச புத்தகம் என்ன?’

மாரியப்பன்: ‘திருக்குறள்’

பிரதமர்: ‘ஓ... உங்களுடன் பேசியது சந்தோஷம்... வாழ்த்துகள்’

மாரியப்பன்: ‘பிரதமர் அய்யாகிட்ட பேசுனது எனக்கும் ரொம்ப சந்தோஷம்’ இவ்வாறு தமிழிலேயே உரையாடல் நடந்தது.

Related Stories: