உள்ஒதுக்கீடு விஷயத்தில் கவர்னர் வன்மத்துடன் செயல்படுகிறார்: தமிழச்சி தங்கபாண்டியன், தென் சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்

இந்தியாவிலேயே மிகச்சிறந்த மருத்துவக் கட்டமைப்பு தமிழகத்தில் தான் உள்ளது. உலகத்தில் பல்வேறு நாடுகளிலிருந்தும், நம் தமிழ்நாட்டிற்கு மருத்துவ உதவி பெற பலர் வருகிறார்கள். அத்தகைய மிகச்சிறந்த மருத்துவர்கள் அனைவரும் நீட் தேர்வு எழுதாமலே பள்ளி இறுதித் தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவராகிச் சேவை செய்து வருகிறவர்கள்தான். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஏனைய தோழமைக் கட்சியினரும் ஆரம்பம் முதலே நீட் தேர்வினை எதிர்த்து வருகின்றனர். கலைஞர் முதல்வராக இருந்த வரை நீட் தேர்வு தமிழகத்தில் நுழையவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளும் எடப்பாடி பழனிசாமியின் அதிமுக அரசில் தான் நீட் தேர்வு தமிழத்திற்குள் நுழைந்துள்ளது. நுழைந்தபின் அது காவு வாங்கிய உயிர்கள் அனிதா முதற்கொண்டு எத்தனை பேர்? இதயம் கனக்கிறது.

கிராமப்புற, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த அடித்தட்டு மாணவ, மாணவிகள் பயன்பெரும் வகையில் நீதியரசர் கலையரசன் தலைமையிலான ஆணையம், தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குமாறு பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக, அதிமுக மற்றும் அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு 7.5 சதவீத ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றிய பின் அது ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 8 பேருக்கு மட்டுமே, மருத்துவ படிப்புக்கு, இந்த ஆண்டு சேர்க்கை கிடைக்கலாம் என்கிறது பத்திரிகைச் செய்திகள். 7.5 சதவீத ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால் குறைந்தது 300 அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிகிறது. நீதியரசர் ஆணையம் பரிந்துரைத்த 10 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டால் மேலும் 100 மாணவ, மாணவிகளுக்கு வாய்ப்புள்ளது. 7.5 சதவீத ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி 40 நாட்களுக்கு மேல் ஆகியும் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநரை தடுக்கும் சக்தி எது என்ற கேள்வி எழுகிறது. கிராமப்புற, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த அடித்தட்டு மாணவ, மாணவிகள் மருத்துவக் கல்லூரியில் சேர்வதைத் தடுக்கும் வன்மத்துடன் ஆளுநர் செயல்படுவது போல் தெரிகிறது. அதற்கு சனாதன மத்திய அரசின் கட்டளையே காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 விழுக்காடு ஒதுக்கீடை மட்டும் மிக விரைவில் நடைமுறைபடுத்திய பாஜ அரசின் பிரதிநிதியாக செயல்படும் ஆளுநர், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இந்த 7.5 விழுக்காடு ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கத் தாமதிப்பது ஏன்? கிராமப்புற, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த அடித்தட்டு மாணவ, மாணவிகளின் நலம் கருதி அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் கிடைக்க, மருத்துவப் படிப்பில், அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 7.5 சதவீதம் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் விரைந்து அனுமதி அளிக்க வேண்டும்.

இத்தகைய மிக முக்கியமான கேள்விகளை முன்வைத்து, மக்களின் மன உணர்வைப் பிரதிபலித்து, ஆளுநரின் இந்த மெத்தன போக்கைக் கண்டித்து கடந்த 24ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த கண்டன ஆர்ப்பாட்டம் ஊட்டியிருக்கின்ற எழுச்சி மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும் மக்கள் விடுத்திருக்கின்ற எச்சரிக்கை. அதிகார மமதையால் தமிழக மக்களின் எதிர்காலத்தை பணயம் வைக்கின்ற இந்த அதிமுக அரசு, தேர்தல் களத்தில் தூக்கி எறியப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை. பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 விழுக்காடு ஒதுக்கீட்டை மட்டும் மிக விரைவில் நடைமுறைபடுத்திய பாஜ அரசின் பிரதிநிதியாக செயல்படும் ஆளுநர், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இந்த 7.5 விழுக்காடு ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கத் தாமதிப்பது ஏன்?

* தமிழக கவர்னரால் மாணவர்களின் மருத்துவ கனவு சிதைக்கப்படுகிறது:  மாணிக்கம் தாகூர், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர்

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்திற்கு கவர்னர் இன்னும் அனுமதி கொடுக்காதது கண்டிக்கத்தக்கது. அவருக்கு முடிவெடுக்கிற அதிகாரம் இருந்தாலும், தேவையில்லாத காலதாமதம் என்பது அவர் சார்ந்திருக்கிற மத்திய அரசை நடத்துகிற ஆர்எஸ்எஸ்சின் பார்வையோடு ஒத்துப்போகிறதோ என்ற கருத்து மிக முக்கியமானது. ஆர்எஸ்எஸ்சை பொறுத்தவரை காலம் தொட்டே இடஒதுக்கீடுக்கு எதிரானது. அதுவும் குறிப்பாக, அதன் தலைவர் மோகன் பகவத் 2015ல் சொல்லும் போது, ‘இந்தியாவில் இடஒதுக்கீடு என்பதை நிறுத்த வேண்டிய காலம் வந்து விட்டது’ என்று கூறினார். அதனால் ஆர்எஸ்எஸ் சிந்தனையை ஒட்டிய அரசு தான் மத்தியில் நடக்கிறது. அவர் தனது அறிக்கையில் கூட இதுபற்றி கூறியிருக்கிறார்.

அவர்களுடைய எண்ண ஓட்டம் எப்போதும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருந்திருக்கிறது. மத்திய பாஜ அரசை பொறுத்தவரை ஆர்எஸ்எஸ்சின் எண்ண ஓட்டத்தை செயல்படுத்தக்கூடிய அரசாகவே இருந்து வருகிறது. அதன் விளைவாகவே தமிழக கவர்னர் இப்போது தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துகிறார். மத்திய பாஜ அரசின் பிரதிநிதியாகவே தமிழக கவர்னர் இருக்கிறார். அதன் பிரதிபலிப்பு தான் தற்போது தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்து வருகிறது என்று தான் கூற வேண்டும்.

அதிமுக அரசுக்கு தைரியம் இல்லாததால் தான் இதுபோன்ற பிரச்னைகளை மிக எளிதாகவும், கடுமையாகவும் மத்திய பாஜ அரசால் கொண்டு செல்ல முடிகிறது. குறிப்பாக எதிர்கட்சிகள், மதசார்பற்ற கூட்டணி தலைவர் என்ற முறையில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத் தான் தமிழக கவர்னர் இந்த பிரச்னையில் முடிவெடுக்க தனக்கு காலம் தேவை என்று கூறியுள்ளார். இல்லாவிட்டால் இதுபற்றிய பேச்சே எடுக்காமல் அப்படியே கிடப்பில் போட்டிருப்பார்.

மத்திய பாஜ அரசை பொறுத்தவரை அதிமுக ஆட்சியை தனது கைக்குள் வைத்திருக்கிறது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது. இதில் கவர்னர் நல்ல முடிவு எடுக்கவில்லை என்றால் இந்த நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு என்பது எட்டாக் கனியாகிவிடும். அரசு பள்ளிகளில் படிக்கும் சாமானிய மக்களின் குழந்தைகளுடைய மருத்துவ கனவுகளுக்கு முழுமையாக மூடு விழா நடத்திவிடுவார்கள். ராகுல்காந்தி கடந்த தேர்தலின்போது நீட் தேர்வு முழுமையாக மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று கூறினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சி அமைத்திருந்தால், ராகுல்காந்தி பிரதமர் ஆகி இருந்தால் இந்த நிலை உருவாகி இருக்காது.

தமிழக ஏழை மாணவர்களுக்கும் துரோகம் விளைவிக்கிற நிலையை மத்திய பாஜ அரசு மறைமுகமாக கவர்னரை வைத்து செய்யக்கூடாது. இதற்கு மண்டியிட்டு கிடக்கிற அதிமுக அரசு ஒருபோதும் துணை போகக்கூடாது. கவர்னருக்கு வக்காலத்து வாங்குகிற அமைச்சர்கள் தயவுசெய்து தமிழக மக்களையும், அரசு பள்ளி ஏழை மாணவர்களையும் நினைத்து பார்க்க வேண்டும். அதிமுக என்ற கட்சி முழுமையாக ஆர்எஸ்எஸ்சின் ‘பி’ டீமாக மாறிவிட்டது என்பதற்கு இது ஒரு அத்தாட்சியாக இருக்கிறது. அதிமுக ஆட்சியை மத்திய பாஜ அரசு தனது கைக்குள் வைத்திருக்கிறது. கவர்னர் நல்ல முடிவு எடுக்கவில்லை என்றால் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு என்பது எட்டாக் கனியாகிவிடும். அரசு பள்ளிகளில் படிக்கும் சாமானிய மக்களின் குழந்தைகளது மருத்துவ கனவுகளுக்கு முழுமையாக மூடு விழா நடத்திவிடுவார்கள்.

Related Stories: