கேரள தங்கம் கடத்தல் வழக்கில் ஆளுங்கட்சி எம்எல்ஏவுக்கும் தொடர்பு: சுங்க இலாகா அறிக்கை தாக்கல்

திருவனந்தபுரம்: கேரள தங்கம் கடத்தல் வழக்கில் ஆளுங்கட்சியை சேர்ந்த எம்எல்ஏவுக்கும் தொடர்பு இருப்பதாக சுங்க இலாகா ரகசிய அறிக்கை தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் வழியாக தங்க கடத்தப்பட்ட வழக்கில் கேரள முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் சொப்னா மற்றும் சந்தீப் நாயருக்கு எதிராக சுங்க இலாகா ‘காபி போசா’ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர்களை ஓராண்டு வரை காவலில் வைத்திருக்க முடியும்.

இந்த நிலையில் ‘காபிபோசா’ வழக்குப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக மத்திய நிதித்துறைக்கு சுங்க இலாகா ஒரு ரகசிய அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் தங்கம் கடத்தல் கும்பலுடன் கேரளாவை சேர்ந்த ஆளும்கட்சி எம்எல்ஏ ஒருவருக்கும் தொடர்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கம் கடத்தல் வழக்கில் இன்னொரு முக்கிய நபரான ரமீஸுடனும் இந்த எம்எல்ஏவுக்கு தொடர்பு உள்ளது. ஆனால் விசாரணையில் ரமீஸ் இதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. கடத்தல் தங்கம் பிடிபட்ட ஜூலை 2ம் தேதி, ரமீஸ் தன்னிடம் இருந்த செல்போன்களில் ஒன்றை உடைத்து வீசியுள்ளார்.

அதில் இருந்துதான் எம்எல்ஏ உட்பட பல முக்கிய நபருடன் பேசி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தங்கம் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்தது கொடுவள்ளி தொகுதி மார்க்சிஸ்ட் எம்எல்ஏ காராட் ரசாக் என்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து காராட் ரசாக் கூறுகையில், சுங்க இலாகா தாக்கல் செய்துள்ள ரகசிய அறிக்கையில் ஒரு எம்எல்ஏவுக்கு தங்கம் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளதாகவும் நான் தான் அந்த எம்எல்ஏ என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால் எனக்கும் தங்கம் கடத்தல் கும்பலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது, என் வாழ்க்கையில் இதுவரை அவர்களை சந்தித்ததில்லை. போனில் கூட தொடர்பு கொண்டது கிடையாது. வேறு யாரையோ தப்பிக்க வைக்க இதுபோன்ற பொய் தகவல் பரப்பப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: