இந்திய விமானப்படையால் தகர்க்கப்பட்ட பாலகோட் தீவிரவாத முகாம் மீண்டும் செயல்பட துவங்கியது: நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளுக்கு ஆயுத பயிற்சி

புதுடெல்லி: பாகிஸ்தானில் உள்ள பாலகோட்டில் இந்திய விமானப்படையால் குண்டு வீசி அழிக்கப்பட்ட தீவிரவாத முகாம்கள் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளன. ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் கடந்தாண்டு பிப்ரவரியில், பாதுகாப்பு வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மத்திய அரசு, பாகிஸ்தானில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாலகோட் என்ற இடத்தில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்கள் மீது விமானப்படை தாக்குதல் நடத்தி அழித்தது. இதன் காரணமாக, இருநாடுகளுக்கும் இடையே சிறிது காலம் போர் பதற்றம் நீடித்து வந்தது.

தற்போது, உலகமே கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் நிலையில், சீனாவும் பாகிஸ்தானும் கைகோர்த்துக் கொண்டு இந்திய எல்லைகளில் தொல்லை கொடுத்து கொண்டிருக்கின்றன. லடாக் எல்லையில் சீன ராணுவம் குவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதிகளில் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும் முயற்சிகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய விமானப்படை போர் விமானங்களால் குண்டுவீசி அழிக்கப்பட்ட பாலகோட் தீவிரவாத முகாம்களை மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

இது, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் ஆயுத பயிற்சி மையமாக விளங்குகிறது. இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு இங்குதான் பயிற்சி அளிக்கப்படுகிறது.இந்த முகாமில் புதியதாக நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் சேர்க்கப்பட்டு, ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.  தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்க, பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ.யின் உத்தரவுப்படி, ராணுவத்தை சேர்ந்த கமாண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத வகையில், இந்த முகாம்களில் புதிதாக கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

பதன்கோட் பாணியில் மிகப்பெரிய தாக்குதல்?

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, இந்தியாவில் தீவிரவாதிகள் மூலம் பெரிய தாக்குதலை நடத்த சதித் திட்டம் தீட்டியுள்ளது. கடந்த 2016ல் பஞ்சாப் மாநிலம், பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தில் நடத்திய தாக்குதலை போல், இம்முறை ராஜஸ்தானில் உள்ள ராணுவ தளங்கள் மீது இம்மாதம் இறுதிக்குள் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் திட்டங்களை கையாள்வதற்கான பணி ஜெய்ஷ் இ பயங்கரவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் உளவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, ​​பாகிஸ்தானில் சுமார் 40,000 பயங்கரவாதிகள் உள்ளனர், அவர்களில் 16 பேர் ஐநா சபையால் சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜமாத்-உத்-தாவா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள், இந்த இரண்டு அமைப்புகளும் உலகளவில் தடைசெய்யப்பட்டுள்ளன, ஆனால் அவர்கள் இன்னும் பாகிஸ்தானில் தங்கு தடையின்றி செயல்பட்டு வருகிறார்கள்.

Related Stories: