மேற்கு வங்கத்தில் துர்கை பூஜையில் பங்கேற்பு 78,000 வாக்கு மையங்களில் பிரதமர் மோடி உரை ஒளிபரப்பு: ‘பெண்கள் சக்தியின் அடையாளம்’ என பேச்சு

புதுடெல்லி:  ‘‘பெண்கள் துர்கையின் அடையாளம். அவர்களுக்கு அதிகளவில் அதிகாரங்கள் வழங்க, மத்திய அரசு உறுதிப்பூண்டுள்ளது,’’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தலுக்கு இடையே துர்கா பூஜை திருவிழா நடந்து வருகிறது. 5வது நாள் விழா கொண்டாட்டம் நேற்று தொடங்கியது. கொல்கத்தாவின் சால்ட் ஏரி அருகே பாஜ சார்பில் அமைக்கப்பட்டுள்ள துர்கா பூஜை பந்தலை, டெல்லியில் இருந்து பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக திறந்து வைத்தார். தொடர்ந்து விழாவில் பேசிய அவர், ‘‘துர்கா பூஜை பண்டிகையானது இந்தியாவின் ஒற்றுமை மற்றும் வலிமையை பிரதிபலிப்பதாக உள்ளது. கொரோனா நோய் தொற்று பரவலுக்கு இடையே நாம் இந்த விழாவை கொண்டாடுகிறோம். அனைத்து பக்தர்களும் முன்மாதிரியான கட்டுப்பாட்டை காட்டியுள்ளனர்.

கூடியிருக்கும் கூட்டம் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். ஆனால், மகிழ்ச்சி எல்லையற்றதாக இருக்கிறது. அனைவரும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுங்கள். திருவிழா கொண்டாட்டம் முழுவதும் முகக்கவசம் அணியுங்கள். கொல்கத்தாவின் கிழக்கு-மேற்கு மெட்ரோ திட்ட பணிக்காக ரூ.8,500 கோடி அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் துர்கையின் அடையாளம் போன்றவர்கள். அவர்களின் முன்னேற்றத்துக்கான அதிகாரங்களை வழங்க, மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது,’’ என்றார்.  பிரதமரின் இந்த உரையை மக்கள் பார்க்கும் வகையில், 78 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்களில் திரைகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Related Stories: