தேர்தல் களத்தில் உச்சக்கட்ட அனல் பீகாரில் இன்று மோடி, ராகுல் பிரசாரம்

பாட்னா: பிரதமர் மோடியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் தங்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, பீகாரில் இன்று முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். பீகார் மாநில சட்டப்பேரவைக்கு 3 கட்டத் தேர்தல் நடக்கிறது. வரும் 28ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். பிரதமர் மோடி இன்று டெஹ்ரி, கயா மற்றும் பாகல்பூர் ஆகிய இடங்களில் இன்று நடக்கும் தேர்தல் பிரசார பேரணிகளில் பங்கேற்று பேசுகிறார். டெஹ்ரி, பாகல்பூர் கூட்டங்களில் முதல்வர் நிதிஷ் குமாரும் அவருடன் கலந்து கொள்கிறார். இதேபோல், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் பீகாரில் இன்று தனது பிரசாரத்தை தொடங்குகிறார். நவாடாவில் உள்ள ஹிசுவா, பாகல்பூரில் உள்ள காஹால்கானில் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

மகாபந்தன் கூட்டணி கட்சியின் முதல்வர் வேட்பாளரான ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், ராகுல் காந்தியுடன் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் நாள்தோறும் 4-5 தேர்தல் பிரசாரங்களில் கலந்து கொள்கிறார். மேலும், வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவும் தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகிறார்.  எதிர்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவும் நாள்தோறும் 8-9 தேர்தல் பிரசாரங்களில் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார். தற்போது, பிரதமர் மோடியும், ராகுலும் களம் இறங்குவதால் பீகார் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டுகிறது.

Related Stories: