சிறுவயதில் பனைக்கதிர் ராக்கெட் விட்டவர் அக்னி ஏவுகணை விட்டு அகிலம் புகழ வாழ்ந்தார்: இன்று சர்வதேச மாணவர் தினம் (அப்துல் கலாம் 89வது பிறந்த தினம்)

ராமேஸ்வரம்: இந்தியாவின் 11வது குடியரசு தலைவரான மறைந்த ஏ.பி.ஜெ.அப்துல்கலாம், 1931ம் ஆண்டு, அக். 15ல் ராமேஸ்வரத்தில் பிறந்தார். சிறுவயதிலேயே குடும்பத்தின் ஏழ்மை நிலையை உணர்ந்து வளர்ந்த கலாம் படிப்பில் மிகவும் ஆர்வம் காட்டினார். ராமேஸ்வரத்தில் ஆரம்ப கல்வியை பயின்றவர், கணிதப்பாடத்தை ஆர்வத்துடன் படித்தார். அதிகாலையில் ராமேஸ்வரம் நகரில் வீடுகளில் செய்தித்தாள் விநியோகம் செய்து அதன்மூலம் கிடைக்கும் வருவாயை படிப்பு செலவிற்கு பயன்படுத்தி கொண்டார். ராமநாதபுரத்தில் உயர்நிலை கல்வியும், தொடர்ந்து திருச்சியில் கல்லூரி படிப்பையும் முடித்து இயற்பியல் பாடத்தில் பட்டம் பெற்றார். தொடர்ந்து சென்னையில் வானியல் படிப்பில் சேர்ந்து பொறியியல் பட்டம் பெற்று ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டார்.

மத்திய அரசின் பாதுகாப்பு - ஆராய்ச்சி துறையில் 1958ல் பணியில் சேர்ந்த கலாம், ஏவுகணை திட்டப்பணியில் இணைந்து திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் ஏவுகணைகளை வடிவமைத்து உருவாக்கினார். சிறு வயதில் ராமேஸ்வரம் கடற்கரையில் வானில் சிறகு விரித்து பறக்கும் பறவைகளை வியந்து பார்த்தும், தீபாவளி பண்டிகையின்போது பனைக்கதிரில் வெடிமருந்து கலந்து தீப்பற்ற வைத்து ராக்கெட் போல் வானில் வீசி தீப்பொறி பறக்க வெடிக்க வைத்தும், கிணற்றுக்குள் சிறு கற்களை போட்டு நீருக்கு மேல்வரும் குமிழை ரசித்ததும்தான் இவரது மனதில் முதன்முதலாக அறிவியல் சார்ந்த கேள்விகளுக்கான விடை தேடும் உந்துதலை ஏற்படுத்தியது.

தாய்மொழி தமிழில் கல்வி பயின்று அறிவியல் துறையிலும் அனைவரும் வியக்கும் வகையிலான பல சாதனைகளை செய்த கலாம், மத்திய அரசின் பல உயரிய பதவிகளில் சிறப்புடனும், நேர்மையுடனும் பணியாற்றினார். 2002, ஜூலை 25ம் தேதி இந்திய நாட்டின் 11வது குடியரசு தலைவராக பதவியேற்றார்.

பள்ளி, கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடி, இளைஞர்கள் லட்சியத்தை அடைய, அதனை சாத்தியமாக்க கனவு காண வேண்டும் என அறிவுரைகள் வழங்கி, மாணவர்களிடையே உந்துதலை ஏற்படுத்தினார். இவருக்கு நாட்டின் உயரிய ‘பாரத ரத்னா’ விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்திய இளைஞர்களின் ரோல்மாடலாக விளங்கிய கலாம் குடியரசு தலைவராக தனது பதவிக்காலத்தை நிறைவு செய்தபின் தனக்கு பிடித்தமான ஆசிரியர் பணிக்கு திரும்பினார். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர்களை சந்தித்து கல்வி கற்பித்து உரையாடுவதை தனது இறுதிக்காலம் வரை இடைவிடாது செய்து வந்தார்.

2015ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாணவர்களிடையே உரையாடி கொண்டிருந்தபோது திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது நினைவை போற்றும் வகையில் அவர் பிறந்த அக். 15ம் தேதி ‘சர்வதேச மாணவர் தினமாக’ கடைப்பிடிக்கப்படுகிறது. நாட்டின் மீதும், மக்கள் மீதும் பற்று கொண்டவராக வாழ்ந்து மறைந்த கலாமிற்கு ராமேஸ்வரம் பேக்கரும்பில் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், ரூ.15 கோடி மதிப்பில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தென்கோடியில், கடல் சூழ்ந்த தீவில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து உலகம் போற்றும் அறிவியலாளராக, மக்கள் போற்றும் ஜனாதிபதியாக வாழ்ந்து மறைந்த அக்னி ஏவுகணையின் தந்தை அப்துல்கலாமின் 89வது பிறந்தநாளான இன்றைய நாளில் அவரை போற்றி புகழ்வோம்.

Related Stories: