திண்டுக்கல் அருகே பரபரப்பு 28 கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல்: வீசிச் சென்றது யார்? போலீசார் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சிறுமலை கிராமத்தில் 28 கள்ளத்துப்பாக்கிகளை வீசிச் சென்றவர்கள் குறித்து  போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான சிறுமலையில் கள்ளத்துப்பாக்கிகள் புழக்கம் அதிகம்  இருப்பதாக திண்டுக்கல் சரக டிஐஜி முத்துச்சாமிக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், கடந்த ஒரு மாதமாக போலீசார் அப்பகுதியில் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து  வருகின்றனர். இதையறிந்த கள்ளத்துப்பாக்கி தயாரிப்பவர்கள், சிறுமலை ஓடைப்பகுதிகளில் துப்பாக்கிகளை வீசிச்  சென்றனர். இதுவரை 25க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை சாணார்பட்டி போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், திண்டுக்கல் எஸ்பி ரவளிபிரியா உத்தரவின்பேரில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், கியூ பிரிவு போலீசார்  மற்றும் திண்டுக்கல் தாலுகா போலீசார், 5 குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு குழுவுக்கும் 50 போலீசார் வீதம் சிறுமலை கிராமத்தில்  வீடு, வீடாக அதிரடி சோதனை நடத்தினர். இதில், கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

துப்பாக்கி வைத்திருந்த 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், கள்ளத்துப்பாக்கி தயாரிப்பவர்கள்,  அவர்களிடமிருந்து வாங்கி விற்பவர்கள் என 12க்கும் மேற்பட்டோரை, சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பிடித்து  விசாரித்து வருகின்றனர். போலீசார் சோதனை எதிரொலியாக, ‘‘அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருப்பவர்கள் பொது  இடத்தில் போட்டு விடுங்கள்’’ என, சிறுமலை கிராம நிர்வாகம் நேற்று முன்தினம் தண்டோரா மூலம் தகவல் தெரிவித்ததாக  கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகள், காட்டுப்பகுதியில் கள்ளத்துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்தவர்கள் நேற்று முன்தினம் இரவு  சிறுமலை அருகே கடம்பன்குளம் கிராமத்தில் உள்ள ஒரு பொது இடத்தில் துப்பாக்கிகளை வீசி விட்டு சென்றனர். தகவலறிந்து வந்த திண்டுக்கல் தாலுகா போலீசார், வனத்துறை அதிகாரிகள் மொத்தம் 28 கள்ளத்துப்பாக்கிகள், 4 பேரல்களை  கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.ஒரே இடத்தில் 28 துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: