வலங்கைமானில் பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் மின்விளக்கு வசதி இல்லாததால் பயணிகள் அவதி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வலங்கைமான்: வலங்கைமான் தாலுக்காவில் பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் பயணிகளின் நலன் கருதி மின்விளக்கு வசதி செய்து தர சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்காவில் ஒரு பேரூராட்சி மற்றும் ஐம்பது கிராம ஊராட்சிகள் உள்ளன. பேருந்து வழித்தடம் பகுதியில் உள்ள பகுதிகளில் பல்வேறு கால கட்டங்களில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பேருந்து நிறுத்தங்கள் கட்டப்பட்டுள்ளது. அவை பல இடங்ளில் முறையாக பராமரிப்பின்றி காணப்படுகின்றது. மேலும் பல பேருந்து நிறுத்தங்கள், அசுத்தமாகவும் போதிய இருக்கைகள் உடைக்கப்பட்டும், கட்டிடத்தில் உள்ள ஜன்னல்கள் உடைந்துபோய் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.

அதற்கு முக்கிய காரணம் பேருந்து நிறுத்தங்களுக்கு மின்வசதி செய்யப்படாமல் இருப்பதால் சமூகவிரோதிகள் இருள்சூழ்ந்த நேரத்தில் பல சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் மின்விளக்கு வசதிகள் இல்லாததால் பேருந்து நிறுத்தம் பகுதியில் இரவு நேரங்களில் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். பல பேருந்து நிறுத்தங்கள் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மதுபான கூடங்களாக உள்ளது. இப்பேருந்து நிறுத்தங்கள் பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவைகளுக்கு தனித்தனியே மின் இணைப்பு பெறுவதற்கு கூடுதல் செலவாகும் நிலை இருப்பதால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் மின்விளக்கு வசதி இல்லாத பேரூந்து நிறுத்தங்களுக்கு அப்பகுதியில் பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் உள்ள தெருவிளக்குகளுக்கு செல்லும் மின் வழித்தடத்திலிருந்து மின் இணைப்பினை ஏற்படுத்தி மின்விளக்கு வசதி செய்து தரவேண்டும். இதனால் தெருவிளக்குகள் எரியும்போது மின்விளக்குகள் எரிவதும், தெருவிளக்குகள் நிறுத்தும் போது மின்விளக்குகள் நிறுத்துவதும் எளிமையானதாக அமையும். எனவே சமூக விரோதிகளிடமிருந்து பேருந்து நிறுத்தத்தை பாதுகாத்திடவும், இரவு நேரங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் அச்சமின்றி பயன்படுத்த ஏதுவாக உரிய நிதி ஒதுக்கி அனைத்து பஸ் நிறுத்தங்களுக்கும் போர்க்கால அடிப்படையில் மின்விளக்கு வசதி செய்துதர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: