போதைப்பொருள் தொடர்பான வழக்கில் நடிகை ரியாவுக்கு ஜாமீன்: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நடிகை ரியா சக்கரவர்த்திக்கு மும்பை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து வழக்கை சி.பி.ஐயும், தற்கொலையுடன் தொடர்புடைய சட்ட விரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத் துறையும் விசாரித்தபோது, சுஷாந்த் சிங்கின் காதலியான நடிகை ரியா சக்ரவர்த்திக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதும், அவர்களிடம் இருந்து வாங்கி சுஷாந்த் சிங்கிற்கு கொடுத்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக ரியாவிடம் தேசிய புலனாய்வு, போதைப்பொருள் தடுப்பு பிரிவு என பல்வேறு முக்கிய அமைப்புகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் கடந்த மாதம் 8ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு நடிகை ரியா மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், ரியா சக்கரவர்த்திக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும், இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுஷாந்த் சிங்கின் ஊழியர்கள் திபேஷ் சாவந்த், சாமுவேல் மிரண்டா ஆகியோருக்கும் ஜாமீன் வழங்குவதாக உத்தரவிட்ட நீதிமன்றம்,  ரியாவின் சகோதர சோவிக்கின் மனுவை மட்டும் நிராகரித்து விட்டது.

வெளிநாடு செல்ல தடை

நடிகை ரியாவுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தது. அதன் விவரம் வருமாறு:

* பிணைத் தொகையாக ரூ1 லட்சம் செலுத்த வேண்டும்.

* பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்.

* அனுமதியின்றி வெளிநாடு செல்லக் கூடாது.

* பத்து நாட்களுக்கு ஒருமுறை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும்.

Related Stories: