கடம்பூர் மலைப்பகுதியில் 3 கி.மீ. நடந்து சென்று ரேஷன் பொருட்கள் வாங்கும் அவலம்

சத்தியமங்கலம்:  சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதிக்குட்பட்ட பகுதியில் குன்றி மலைப்பகுதி அமைந்துள்ளது. குன்றி பகுதியில்  8க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் வசிக்கும் 1260 குடும்பங்களுக்கு குன்றி கிராமத்திலுள்ள ரேஷன் கடையில் அரிசி,  பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. இதில் தொலைதூர கிராமங்களான பெரியகுன்றி, அணில் நத்தம், கிளமன்ஸ் தொட்டி, நாயக்கன்தொட்டி உள்ளிட்ட மலை கிராம மக்கள் குன்றியில்  உள்ள ரேஷன் கடைக்கு சுமார் 3 கி.மீ. தூரம் அடர்ந்த வனப்பகுதி வழியாக நடந்து சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வருவதில் சிரமம்  ஏற்பட்டதால், பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு  பெரியகுன்றி கிராமத்தில் உள்ள ஒரு வாடகை கட்டடத்தில் பகுதி நேர ரேஷன் கடை துவங்கப்பட்டது.

இந்த கடை துவங்கி ஓராண்டுகூட ஆகாத நிலையில், பகுதி நேர ரேஷன் கடை செயல்படும் வாடகை கட்டிடம் பாதுகாப்பற்ற நிலையில், இருப்பதாக  கூறி ரேஷன் கடை மீண்டும் குன்றியில் செயல்படும் முழு நேர ரேஷன் கடைக்கு மாற்றப்பட்டது. இதன் காரணமாக பெரியகுன்றி, அணில் நத்தம்,  கிளமன்ஸ் தொட்டி, நாயக்கன்தொட்டி ஆகிய கிராமங்களில் வசிக்கும் 260 குடும்ப அட்டைதாரர்கள் மீண்டும் குன்றியில் உள்ள ரேஷன் கடைக்கு 3  கி.மீ. தூரம் நடந்து சென்று அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கி தலைச்சுமையாக கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் அரிசி உள்ளிட்ட பொருட்களை அவர்களது கிராமத்திற்கு இருசக்கர வாகனங்களில் கொண்டு செல்ல ரூ.50 வரை வசூலிக்கப்படுவதாக  கூறப்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் நகர்ப்புறங்களில் நடமாடும் ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. ஆனால், கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள  மலை கிராமங்களில் அடர்ந்த வனப்பகுதி வழியாக நீண்ட தூரம் நடந்து சென்று தலைச்சுமையாக ரேஷன் பொருட்கள் கொண்டு செல்ல வேண்டிய  அவலநிலை உள்ளது.     எனவே மலை கிராமங்களில் நடமாடும் மற்றும் பகுதிநேரக் கடை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், என மலை கிராம மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Related Stories: