பல்வேறு தனியார் தொழிற்சாலைகளில் வெளியேறும் கழிவுகள் கொட்டப்படுவதால் குப்பை குடோனாக மாறிவரும் செம்பரம்பாக்கம் ஏரி: கிராம மக்கள் பரபரப்பு புகார்

ஸ்ரீபெரும்புதூர்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரபாக்கம் ஏரி தொழிற்சாலையில் வெளியேறும் குப்பை கழிவுகளை கொட்டும் குடோனாக மாறி வருகிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுகோட்டையில் சிப்காட் தொழிற்சாலை வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில், இருங்காட்டுகோட்டை, கீவளூர், காட்டரம்பாக்கம் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. இங்கு கார் உற்பத்தி தொழிற்சாலை மற்றும் 300க்கும் மேற்பட்ட உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு பொருட்கள் மற்றும் ரசாயன கழிவுகளை அப்புறப்படுத்த அதே பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர்களுடன் தொழிற்சாலை நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதையொட்டி, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் அனைத்து கழிவு பொருட்களையும் அகற்றும் பணியை மேற்கொண்டுள்ள ஒப்பந்ததாரர்கள், அந்த கழிவுகளை டேங்கர் மற்றும் லாரிகள் மூலம் கொண்டு சென்று காட்டரம்பாக்கம் கிராம எல்லையை ஒட்டி உள்ள, சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் கொட்டுகின்றனர். இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி, தொழிற்சாலை கழிவுகள் மற்றும் ரசாயன கழிவுகள் கொட்டப்படும் மெகா குப்பை குடோனாக மாறிவருகிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொண்டுள்ள ஒப்பந்ததாரர்கள், இரவு நேரங்களில் கழிவுபொருட்களை மொத்தமாக குவித்து எரிக்கின்றனர்.

இதனால் காட்டரம்பாக்கம் கிராமம் முழுவதும் புகை மண்டலமாக மாறுவதுடன், அதைசுற்றியுள்ள மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல், சுவாச கோளாறு ஆகியவை ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும், சுற்றுச்சூழல் மிகவும் பாதிப்படைகிறது. இதுகுறித்து, காட்டரம்பாக்கம் கிராம மக்கள் சார்பில் போலீசார், மாசு கட்டுபாட்டு துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர், பொதுப்பணித் துறை அதிகாரிகள், குடிநீர் வாரிய அதிகாரிகள், வருவாய் துறையினர் என பல்வேறு துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால், இதுவரை அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் புகார் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், வரும் மழை காலத்தை கருத்தில் கொண்டு, செம்பரம்பாக்கம் ஏரியில் கொட்டப்படும் கழிவுகளை உடனே அகற்ற வேண்டும். சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: