கொரோனாவிலும் வீடுதோறும் சென்று வகுப்பு மலைவாழ் குழந்தைகளுக்காக 32 ஆண்டுகால கல்விச்சேவை: நல்லாசிரியர் விருதை அலங்கரித்த முதுகலை ஆசிரியர்

விருதால் சிலருக்கு பெருமை என்றால், அந்த விருதிற்கே பெருமை சேர்க்கும் வகையில் சிலர் சாதனைகளை புரிவது உண்டு. அத்தகைய சாதனைகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார், சேலத்தை சேர்ந்த முதுகலை பெண் ஆசிரியர். சேலம் 5 ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி எஸ்தர் ராணி (53). வீடு இருப்பது மாநகரின் மையப்பகுதியாக இருந்தாலும், அவர் தனது வாழ்வில் பெரும்பாலான நேரத்தை கழித்தது, தான் பணிபுரியும் மலைக்கிராம பள்ளிகளில் தான். பணியில் சேர்ந்தது முதல் இன்று வரை, தனது 32 ஆண்டுகால கல்விச்சேவையை மலைவாழ் குழந்தைகளுக்காகவே அர்ப்பணித்துள்ளார், எஸ்தர் ராணி.

இவர் பெரும்பாலும் பணிபுரிந்தது மலைக்கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின குழந்தைகளுக்கான உண்டு, உறைவிடப்பள்ளிகளில் தான். அவர்களின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக பல முயற்சிகளில் ஈடுபட்டு வரும் இவருக்கான அங்கீகாரமாக நடப்பாண்டு மாநில நல்லாசிரியர் விருதை வழங்கி கவுரவித்துள்ளது, தமிழக பள்ளிக்கல்வித்துறை.  கடந்த 1988ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட நல துவக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். பின்னர் 1992ம் ஆண்டு சேலம் மாவட்டம் அறநூத்துமலையில் உள்ள மலைக்கிராம பள்ளிக்கு மாறுதலாகி வந்த இவர், நாமக்கல் மாவட்டம் களங்காணி, கொல்லிமலை என மாறி, மாறி பணிபுரிந்து, பின்னர் பதவி உயர்வு மூலம் மாணவிகள் விடுதியில் காப்பாளினியாக பணிபுரிந்தார்.

தொடர்ந்து, ஆங்கில முதுகலை ஆசிரியராக பதவிஉயர்வு பெற்ற இவர், முள்ளுக்குறிச்சி பள்ளியிலும், அதனை பின்னர் கடந்த 10 ஆண்டுகளாக வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை வெள்ளிக்கவுண்டனூர் உண்டு, உறைவிடப் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். மாணவர்களின் நலனை கருத்தி கொண்டு, கொரோனா காலத்திலும் அங்கேயே தங்கியிருந்து, கிராமம், கிராமமாக சென்று பாடம் நடத்தி வருகிறார். அங்குள்ள ராஜாபட்டணம், கண்ணுக்காரனூர், புழுதிக்குட்ைட, பழையூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் மட்டுமின்றி, சிறு வகுப்பு மாணவர்களுக்கும் ஆங்கில சார்ந்த சந்தேகங்களை தீர்த்து வருகிறார்.

இதுகுறித்து சாந்தி எஸ்தர்ராணி கூறுகையில், “மற்றவர்கள் ஏற்க தயங்கும் மலைக்கிராம பள்ளிகளில், இத்தனை ஆண்டுகாலம் பணிபுரிந்ததை பெருமையாக கருதுகின்றேன். எந்தவித வசதிகள் இல்லாத நிலையிலும், படிப்பிற்கான மலைக்கிராம குழந்தைகள் எடுக்கும் சிரமம், அவர்களுக்காக ெதாடர்ந்து சேவை புரிய ஊக்கம் அளித்தது,” என்றார்.

Related Stories: