புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு எதிராக ரகசிய கூட்டங்கள்: தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் சேலம் அதிமுக நிர்வாகிகள்

சேலம்: அதிமுகவில் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளர் யார்? பொதுச் செயலாளர் பதவி யாருக்கு? என்பது குறித்து அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. இது குறித்து வரும் 7ம்தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இதற்கிடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் தனியாகவும், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் முக்கிய நிர்வாகிகள் தனியாகவும் ஆலோசனை நடத்தி வருவது அதிமுகவில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

இப்படி மேல்மட்டத்தில் மோதல் நீடித்து வரும் நிலையில், அடிமட்டத்திலும் கட்சியினரிடையே கடும் அதிருப்தி கிளம்பி உள்ளது. இதில் குறிப்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான இடைப்பாடி பகுதியில் இதற்கான பிள்ளையார் சுழி போடப்பட்டிருப்பது சேலம் அதிமுகவில் புதிய தலைவலியாக மாறி உள்ளது.

அதிமுக கட்சி வளர்ச்சிக்காக மாவட்ட வாரியாக பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. இதில் பல ஒன்றியங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான இடைப்பாடியில் இடைப்பாடி, நங்கவள்ளி என்று 2 ஒன்றியங்கள் உள்ளது. இந்த ஒன்றியங்களை வடக்கு, தெற்கு என்று பிரித்து 4பேரை புதிய செயலாளர்களாக நியமித்துள்ளனர். இப்படி புதிய செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் கட்சிக்கு புதிதாக வந்தவர்கள் என்பதே மூத்த நிர்வாகிகளிடம் வெளிப்படும் முதல் அதிருப்தியாக உள்ளது. இந்த அதிருப்தி தற்போது பல இடங்களில் ரகசிய கூட்டங்களாக மாறியுள்ளது. நேற்று முன்தினம் இடைப்பாடி தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளியில் நூறுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் ரகசிய இடத்தில் கூடி, தெற்கு ஒன்றிய செயலாளரான செல்வத்திற்கு எதிராக முழங்கிய வீடியோக்கள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் மூத்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சின்னத்தம்பி என்பவர் பேசுகையில், ‘‘2021ம் ஆண்டு தேர்தலில் கட்சி ஜெயிக்க வேண்டும் என்பதற்காக இந்த கூட்டம் நடக்கிறது. தற்போது தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் 7 வருடத்திற்கு முன்பு கட்சிக்கு வந்தவர். முதல்வர் அறிவித்துவிட்டார் என்பதற்காக அவரை ஏற்றுக் கொண்டோம். ஆனால் அவர், 30, 40வருஷமாக கட்சியில் இருப்பவர்களை அனுசரித்து செல்வதில்லை. கட்சிக்காரர்களுக்கு போலீஸ் ஸ்டேஷனில் ஏதாவது பிரச்னை என்றால் எங்கள் திறமையால் மட்டுமே காப்பாற்ற வேண்டியுள்ளது. சூரப்பள்ளி, கரிக்காபட்டி ஊராட்சிகளை சிரமப்பட்டு அதிமுக வசம் கொண்டு வந்தோம். ஆனால் தற்போதைய ஒன்றிய செயலாளரின் நடவடிக்கைளால் எல்லாம் பாழாகி விடும்போல் உள்ளது. எனவே அவரது ஒன்றிய செயலாளர் பதவி குறித்து முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்,’’என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை இபிஎஸ்-ஓபிஎஸ் அணி என்று தனியாக கிடையாது. 2021ல் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். ஆனால் மாவட்டம் முழுவதும் ஒன்றியங்களை இரண்டாக பிரித்து இருவருக்கு செயலாளர் பதவி வழங்கியதில் அனைத்து இடங்களிலும் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. இதில் முதல்வரின் இடைப்பாடி தொகுதியில் அடிக்கடி அதிருப்தியாளர்கள் ரகசிய கூட்டம் நடத்தி வருகின்றனர். உடனடியாக முதல்வர் இதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தல் நேரத்தில் பெரும் சிக்கல்கள் உருவாகும் வாய்ப்புள்ளது,’’ என்றார்.

Related Stories:

>