விவசாயிகளுக்கு எதிரான பி.டி.கத்திரிக்காய் கள ஆய்வை அனுமதிக்க கூடாது: அதிமுக அரசு நிராகரிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. கத்தரிக்காய் விதைகளை’ தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் களப்பரிசோதனை செய்ய அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவிற்குத் திமுக சார்பில் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்த 2010ம் ஆண்டில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்களை வணிக ரீதியில் உற்பத்தி செய்யத் தடை விதிக்கப்பட்டது. இந்த முடிவினை, தற்போது மத்திய பாஜ அரசு மாற்றுகிறது. மனித குலத்திற்கும், உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பேராபத்தை விளைவிக்கும் ‘பி.டி. கத்தரிக்காய் கள ஆய்வை’ பாஜ அரசு அனுமதித்திருப்பது, விவசாயிகளின் எதிர்காலம் பற்றியோ அல்லது அவர்களின் நலன் பற்றியே கவலைப்படாத பொறுப்பற்ற போக்கு என்பதை விட, நம்மூர் விவசாயிகளுக்குக் கத்தரிக்காய் விவசாயத்தைக் கூட நாங்கள் கற்றுத் தருகிறோம் என்று கூறும் ஆணவப் போக்காகும்.

தமிழ்நாட்டில் ‘பி.டி. கத்தரிக்காய் கள ஆய்வுக்கு’ வழங்கியுள்ள அனுமதியை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். ‘மாநில அரசும் உரிய அனுமதி வழங்கினால் மட்டுமே இந்தக் கள ஆய்வை மேற்கொள்ள இயலும்’ என்பதால்  பி.டி. கத்தரிக்காய் கள ஆய்வினை தமிழ்நாட்டில் மேற்கொள்ள எக்காரணம் கொண்டும் அதிமுக அரசு அனுமதிக்கக் கூடாது என்றும் ‘விவசாயிகளுக்கு எதிரான’ இந்தக் கள ஆய்வை முதல்வர் பழனிசாமி நிராகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்துள்ள முதல்வர் 2020-2021ம் ஆண்டிற்கான நெல் கொள்முதல் விலையை - சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 70 ரூபாயும், சன்னரக நெல்லுக்கு 50 ரூபாயும் மட்டுமே “பெயரளவிற்கு” உயர்த்தியிருப்பது, விவசாயிகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்களின் அடிப்படை வாழ்வாதாரமே விவசாயம் என்பதால், இந்த குறைந்தபட்ச விலை அறிவிப்பு விவசாயிகளுக்குப் பெருத்த ஏமாற்றத்தையும், விவசாயத்தின் மீது விரக்தியையுமே ஏற்படுத்தி விட்டது. ஆகவே வேளாண் தொழிலையே நம்பியிருக்கும் விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு 3000 ரூபாய் கிடைக்குமளவிற்கு நெல் கொள்முதல் விலையை உயர்த்திட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, அவற்றில் எந்த இடத்திலும் குறைந்த பட்ச ஆதார விலை பற்றிக் குறிப்பிடப்படாத நிலையில், நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை ஒன்றை அறிவித்திருப்பது, அனைவரையும் திசைதிருப்பி ஏமாற்றும் முயற்சி என்பதை விவசாயிகள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: