மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து தமிழகம் முழுவதும் 3,500 இடங்களில் ஆர்ப்பாட்டம்: காஞ்சிபுரம்-மு.க.ஸ்டாலின்

* சென்னை-வைகோ, கே.எஸ்.அழகிரி, பாலகிருஷ்ணன், தஞ்சை-முத்தரசன் கடலூர்-திருமாவளவன்

சென்னை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர் சார்பில் 3,500 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்களை எழுப்பினார். சென்னையில் வைகோ, கே.எஸ்.அழகிரி, பாலகிருஷ்ணன், தஞ்சையில் முத்தரசன், கடலூரில் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு விவசாயிகள் மத்தியில் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு வழிகளில் போராட்டம் விஸ்ரூபம் எடுத்துள்ளது. விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி குடியரசு தலைவர் இந்த 3 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த நிலையில் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றிய மத்திய அரசை  கண்டித்தும், அதற்கு துணை போன மாநில அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் திமுகவில் கட்சி ரீதியாக உள்ள 70 மாவட்டங்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒவ்வொரு மாவட்டத்தில் 50 இடங்கள் என தமிழகம் முழுவதும் சுமார் 3,500 இடங்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி. திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம், இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். அது மட்டுமல்லாமல் அனைத்து விவசாய அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், வணிக சங்கங்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் கீழ் அம்பியில் ஒரு தோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் சேகரன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், க.குமணன், நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். மாநில மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்எல்ஏ வரவேற்றார். இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மதியழகன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் கமலநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார், மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி, விசிக மாவட்ட செயலாளர் பாசறை செல்வராஜ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர்அல்லா பக்ஸ், மமக மாவட்ட அமைப்பு செயலாளர் ஷாஜகான், திராவிடர் கழக மாவட்ட அவைத்தலைவர் அசோகன் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.

சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் கந்தன்சாவடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, எம்எல்ஏக்கள் வாகை சந்திரசேகர், அரவிந்த் ரமேஷ், வர்த்தகர் அணி மாநில செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே.நகர் தனசேகரன், மதிமுக மாவட்டச் செயலாளர் கழக குமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிரபாகர் ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர் பாபு எம்எல்ஏ தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினார். இதில் எம்எல்ஏக்கள் ரங்கநாதன், தாயகம் கவி, ரவிச்சந்திரன், வழக்கறிஞர் அணி செயலாளர் கிரிராஜன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் அரும்பாக்கம் க.வீரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிற்றரசு தலைமை தாங்கினார். இதில் திராவிடர் கழக துணை தலைவர் கலிபூங்குன்றன், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் எம்பிக்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், சண்முகம், எம்எல்ஏ எம்.கே.மோகன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சிவ ராஜசேகரன், பகுதி செயலாளர்கள் ஜெ.கருணாநிதி, மா.பா.அன்புத்துரை, மதன்மோகன், ஏழுமலை, மயிலை த.வேலு, பரமசிவம், ராமலிங்கம், தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜா அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ கலைராஜன், ஐ.கென்னடி, தி.நகர் லயன் சக்திவேல், பி.மாரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் தலைமையில் கொருக்குப்பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எம்.எஸ்.திரவியம் முன்னிலை வகித்தார். இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்று கண்டன உரையாற்றினார். திமுக எம்பிக்கள் வில்சன், கலாநிதி வீராசாமி, எம்எல்ஏ ஆர்.டி.சேகர், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏக்கள் உ.பலராமன், செல்வபெருந்தகை, திமுக பகுதி செயலாளர்கள் மருது கணேஷ், சுந்தரேசன், ஜெபதாஸ் பாண்டியன், காங்கிரஸ் சர்க்கிள் தலைவர்கள் சையது, எஸ்.கே.வீரா ரெட்டி, டி.கே.மூர்த்தி மற்றும் நாஞ்சில் பிரசாத், டெல்லி பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல தஞ்சாவூர்-இரா.முத்தரசன், திருச்சி-கே.எம்.காதர் மொய்தீன், கடலூர்-திருமாவளவன் எம்.பி, தாம்பரம்-எம்.எச்.ஜவாஹிருல்லா, கோவை-ஈ.ஆர்.ஈஸ்வரன், ஆகியோர் பங்கேற்றனர்.  

3.50 லட்சம் பேர் பங்கேற்பு

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியின் முன்னணித் தலைவர்கள், தொண்டர்கள், செயல்வீரர்கள் மற்றும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் கொரோனா கால விதிமுறைகளைப் பின்பற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுகவில் கட்சி ரீதியாக உள்ள 70 மாவட்டங்களில், ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 இடங்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒவ்வொரு இடத்திலும் 100 பேருக்கு மிகாமல் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். கிட்டத்தட்ட 3,50,000 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>