மாணவர்களை குறி வைத்து வியாபாரம்; கஞ்சா விற்பனை மையமாக திகழும் நெல்லை: இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குமா போலீஸ்?

நெல்லை: தென்மண்டலமான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கஞ்சாவின் சொர்க்கபுரியாக நெல்லை திகழ்ந்து வருவதால் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி  அதிலிருந்து வெளியே வர முடியாமல் பலரும் வாழ்க்கையை இழந்து வருகின்றனர். நம்முடைய சமுதாயம் கூட்டு குடும்பங்களாக வாழ்ந்த போது வீட்டில் எப்போதும் கலகலப்பாக இருப்பர். தாத்தா, பாட்டி, தாய், தந்தை என  குடும்பம் குதூகலமாக இருக்கும். தற்போது கூட்டு குடும்பம் வாழ்க்கை சிதைந்ததோடு திருமணம் முடிந்தவுடன் தனிக்குடித்தனம் சென்று வருகின்றனர். இதற்கு வேலைவாய்ப்பும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது.  

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் கணவன், மனைவி ஆகியோர் அரசு அல்லது தனியார் துறையில் பணியாற்றி வருவதாலும் பணி நெருக்கடி காரணமாக வீட்டில் குழந்தைகளுடன் செலவிடும் நேரம் மிகவும் குறைவாக உள்ளது. பெற்றோர், குழந்தைகளிடம் பேசி அவர்களின் திறமைகளை பாராட்டவோ, நிறை மற்றும் குறைகளை பேசி தீர்ப்பதற்கு நேரம் ஒதுக்குவது கிடையாது. இதனால் குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இயந்திரம் போன்ற  வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இதனால் தனிமையில் இருந்து வரும் ஆண், பெண் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் தவறானவர்களுடன் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களுடன் இணைந்து பலர் கஞ்சா என்ற போதை வஸ்துக்கு அடிமையாகி விடுகின்றனர்.

ஒருவருக்கும் தெரியாமல் பற்களின் இடையே வைத்து பழகுகின்றனர். முதலில் வாரத்திற்கு ஒரு முறை கஞ்சாவை உபயோகப்படுத்தும் பழக்கம் நாளடைவில் தினமும் காலையில் எழுந்தவுடன் கஞ்சா பொட்டலத்தில் விழிக்கக் கூடிய  அளவிற்கு அடிமையாகி விடுகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை குறி வைத்தே சிறிய பொட்டலங்களில் மடித்து வைத்து விற்பனை செய்யும் கும்பல் சமீப காலமாக அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் வைத்து விற்பனை செய்யும் கும்பல் அவர்களை அந்த பழக்கத்திற்கு அடிமையாக்கி போதையில் தள்ளி விடுகிறது. நீண்ட காலத்திற்கு பிறகே இது பெற்ேறாருக்கு தெரிந்து குழந்தைகளிடம் தங்களது கண்டிப்பை காட்டுகின்றனர்.

ஆனால் அதனையும் தாண்டி வந்து விட்டால் பெற்றோரின் கண்டிப்பை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. இதனால் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எதிர்காலம் படிப்பில் இருந்து திசை மாறி விடுகிறது. பள்ளிக் கல்வி, உயர் கல்வி என சிறகடித்து பறக்க வேண்டிய இளைஞர்கள் போதை வானில் மிதக்கின்றனர். இதனால் அவர்களது எதிர்காலம் பாழாகி விடுகிறது. குறிப்பாக நெல்லை பாளையங்கோட்டையில் எஸ்பி அலுவலகம் அருகேயே பள்ளி, கல்லூரிகள் நிறைந்த பகுதியில் ஒரு காம்ப்ளக்ஸ் பகுதியில் கஞ்சா விற்பனை கொடி கட்டிப் பறக்கிறது. போலீசார் எப்போதாவது, எங்காவது ஒருவரை கைது செய்வதோடு நின்று கொள்வதால் கஞ்சா வியாபாரிகள் துணிந்து விற்பனையில் ஈடுபடுகின்றனர்.

கஞ்சா விற்பனையில் பெரிய நெட்வொர்க்கே செயல்பட்டு வருகிறது. இதற்கு உதாரணமாக, கடந்த வாரம் சுத்தமல்லி விலக்கில் இப்ராகிம் என்ற ராஜாவிடம் 8.5 கிலோ கஞ்சா பிடிபட்டது. நெல்லை மாநகரத்தில் பேட்டை அருகேயுள்ள  மயிலப்பபுரத்தை சேர்ந்த ஐயப்பன் (32), அவரது சகோதரர்கள் மணி, சுந்தர் ஆகியோர் மீது பேட்டை காவல் நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள்  உள்ளன. இவர்களிடமிருந்து கடந்த இரு ஆண்டுகளில் 55 கிலோ கஞ்சா பறிமுதல்  செய்யப்பட்டது. இவர்கள் கஞ்சா வழக்கில் அடிக்கடி சிறைக்கு சென்று விட்டு ஜாமீனில் வெளியே வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

கடந்த மாதத்தில் மட்டும் நெல்லை வண்ணார்பேட்டையில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேரிடமிருந்து தலா 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல்  தாழையூத்து போலீசார், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கேரளாவை சேர்ந்த  ஷாபியிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவும், 3 வாரங்களுக்கு முன்பு  பார்வதியிடமிருந்து அரை கிலோ கஞ்சாவும், கடந்த 23ம் தேதி தாழையூத்து ராம்நகரை சேர்ந்த பேச்சிமுத்துவிடம் இருந்து ஒன்றே கால் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு  முன்னீர்பள்ளம் அருகே காரில் வந்த வெங்கடேஷ், ஆறுமுகம், தினேஷ் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் மடக்கி பிடித்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இப்படி சமீப காலமாக கஞ்சா விற்பனை மையமாக நெல்லை மாறியுள்ளது. கஞ்சா போக்குவரத்து, பதுக்கல், விற்பனை என பல்வேறு நிலைகள் உள்ளது. எனவே வாகன சோதனையை தீவிரப்படுத்தி, அந்தந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பழைய கஞ்சா வியாபாரிகளை தொடர்ந்து போலீஸ் கண்காணித்தாலே நெல்லையில் கஞ்சாவை ஒழித்து விடலாம். இதன் மூலம் மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை பாதுகாக்க முடியும். அது மட்டுமல்லாது கஞ்சா வழக்கில் சிக்குபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டங்களை பாய்ச்சினால் மட்டுமே கஞ்சா விற்பனையை தடுக்க முடியும். அது போலீசாரின் கையில்தான் உள்ளது.

இதுகுறித்து நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வக்கீல் பிரம்மா கூறுகையில், கஞ்சா விற்பனை முழுக்க முழுக்க பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து  நடத்தப்படுகிறது. கஞ்சாவிற்கு அடிமையாகும் மாணவர்கள், இளைஞர்களின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கஞ்சா கடத்தப்படும் வழி,  அவற்றினை பதுக்கி விற்பவர்கள் உளவுத் துறையினர் மற்றும் போலீசாருக்கு நன்றாக தெரிந்தாலும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதால் அதனை ஒழிக்க முடியவில்லை. நெல்லையில் தெருவுக்கு தெரு டீக்கடை போன்று கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

கஞ்சா கடத்தல் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள் வீடு, வாகனம் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். கஞ்சா பதுக்கி விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர சட்டத்தில் பிரிவுகள் உள்ளன. ஆனால் அதை நடைமுறைப்படுத்த போலீசார் முன் வர வேண்டும். போலீசாரின் மெத்தனப் போக்கால் மட்டுமே கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் செழித்து வளர்ந்தோங்குகிறது. இவ்வாறு பிரம்மா தெரிவித்தார்.

45 வழக்குகள் 84 பேர் கைது

நெல்லை மாவட்ட எஸ்பி  மணிவண்ணன் கூறியதாவது: நான் பொறுப்பேற்ற கடந்த 4 மாதங்களில் இதுவரை கஞ்சா கடத்தல் தொடர்பாக 45 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை  மாவட்டம் முழுவதும் 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா  கடத்தல், பதுக்கல் ஆகியவற்றில் தொடர்புடையவர்கள் ஐந்து பேர் குண்டர்  தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கஞ்சா கடத்தலுக்கு போலீசார் உடந்தையாக இருப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மட்டுமல்லாமல் துறை வாரியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கஞ்சா கடத்தலை தடுப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி, பள்ளி, மார்க்கெட்,  பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படையினர் சாதாரண உடையில்  கண்காணித்து வருகின்றனர். கஞ்சா கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் தடுப்பு  சட்டத்தில் கைது செய்யப்படுவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: