அத்திப்பட்டு ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்: திமுக மாவட்ட செயலாளரிடம் கோரிக்கை

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஆன்லைனில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. திருவள்ளூர் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு, திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல், துணை தலைவர் எம்.டி.ஜி.கதிர்வேல், அத்திப்பட்டு ஊராட்சியில்  அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. அத்திப்பட்டு முதல் நிலை  ஊராட்சியில் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு வரும் தண்ணீர் உவர்ப்பாக உள்ளது. அதனை தவிர்க்க, புதிதாக 5 ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டும்.

வன்னிபாக்கம் கிராமத்தில் இருந்து, நீர்த்தேக்க தொட்டிகளுக்கு செல்லும் பைப்லைன் அமைத்து தரவேண்டும். அத்திப்பட்டு புதுநகர் மேற்கு பகுதியில் மழை காலங்களில் வெள்ளம் சூழும் அபாயம் உள்ளது. எனவே, அப்பகுதியில் புயல் எச்சரிக்கை மையம் கட்டவேண்டும். ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான கட்டிடம் கட்டி, படுக்கை வசதியுடன் அமைத்து தரவேண்டும். காந்தி தெருவில் ரேஷன் கடை கட்டிடம் கட்ட வேண்டும். ஊராட்சியில் சுடுகாடு இடுகாடு சுற்றுச்சுவர் அமைத்து தரவேண்டும். அத்திப்பட்டு புதுநகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் பாதாள சாக்கடை அமைத்து தரவேண்டும்.

அத்திப்பட்டு ஆதிதிராவிடர் காலனி மட்டும் புதுநகர் பகுதியில் 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட 2 குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டி தரவேண்டும். அத்திப்பட்டு ஊராட்சியில் 2 கிமீ தார்ச்சாலை அமைத்து தர வேண்டும். ஊராட்சியில் 15 உயர்மின் கோபுர விளக்கு அமைத்து தரவேண்டும். 10 இடங்களில் குடிநீர் ஆரோ பிளான்ட் கட்டித்தர வேண்டும் ஆகிய கோரிக்கைகள் இருந்தன.

Related Stories: