தூத்துக்குடி மாவட்டம் தட்டார் மடம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்...!! 4 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது..!! - உறவினர்கள் செல்வனின் உடலை வாங்க சம்மதம்!!!

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய 4 நாள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. மேலும் வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து, போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. செல்வன் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். கடந்த 17ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பில் வசித்து வந்த செல்வன் என்பவர் காரில் கடத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அவரது தாயார் எலிசபெத் நெல்லை மாவட்டம் திசையன்வலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்திருந்தார்.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, திசையன்வலை காவல் துறையினரால் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் முக்கிய குற்றவாளியான அதிமுக பிரமுகர் திருமணவேல் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். தொடர்ந்து செல்வன் வழக்கில் முழுமையான குற்றவாளியான தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் சில கட்சியினர் இணைந்து சொக்கன் குடியிருப்பில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட நெல்லை சரக டி.ஐ.ஜி., காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார். பின்னர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் கூறுகையில், செல்வன் குடும்பத்தியில் தகுதி அடிப்படையில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றார். தொடர்ந்து பட்டாவுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரப்படும் என உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனால் போராட்டமானது முடிவுக்கு வந்துள்ளது. மேலும் போலீசார் நில பிரச்சனை தொடர்பான விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நிலமானது உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என உறுதியளித்தார்.

Related Stories: