தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கு : கழகத்திற்கு அவப்பெயர் உண்டாக்கிய திருமணவேல் அதிமுகவில் இருந்து நீக்கம்; காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட்

சென்னை : தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கில் சிக்கிய திருமணவேல் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்ட வர்த்தக அணி செயலாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் தனிஸ்லாஸ் மகன் செல்வன் (35). லாரி டிரைவரான இவரை, நிலத்தகராறு முன்விரோதத்தில் கடந்த 17ம்தேதி ஒரு கும்பல் காரில் கடத்தி கொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், மாவட்ட வர்த்தக பிரிவு அதிமுக செயலாளர் திருமணவேல் உள்ளிட்ட 6 பேர் மீது திசையன்விளை காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

வாலிபர் செல்வன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் உள்ளிட்டோரை உடனடியாக கைது செய்யக்கோரி அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் சொக்கன்குடியிருப்பில் இன்று 4வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது.இந்நிலையில் தனிப்படை போலீசார் வர்த்தக பிரிவு அதிமுக செயலாளர் திருமணவேல், சுடலைக்கண் ஆகியோரை தேடிவந்த நிலையில் அவர்கள் இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.இருவரையும்  3 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்

இந்த நிலையில் தட்டார்மடம் கொலை வழக்கில் தொடர்புடைய திருமணவேல் அ.தி.மு.கவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஏ. திருமணவேல் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டு கொள்கிறோம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், கொலை வழக்கில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: