கேரளாவில் அப்பாவிகள் போல் ஓட்டல்கள், ஜவுளிக்கடையில் வேலை செய்த தீவிரவாதிகள்: என்ஐஏ விசாரணையில் அதிர்ச்சி

திருவனந்தபுரம்: கேரளாவில் சிக்கிய அல்கொய்தா தீவிரவாதிகள் 3 பேரும், ஓட்டல்கள், ஜவுளிக் கடைகளில் அப்பாவிகளை போல் வேலை செய்து வந்துள்ளனர். இந்தியாவில் கேரளா, கர்நாடகா உள்பட சில மாநிலங்களில் ஐஎஸ் ஆதரவு தீவிரவாத குழுக்கள் செயல்படுவதாகவும், இவற்றில் 200 தீவிரவாதிகள் இருப்பதாகவும் 2 மாதங்களுக்கு முன்பு ஐநா எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ரகசிய விசாரணையில் இறங்கியது. கடந்த 18ம் தேதி இரவு முதல் என்ஐஏ.வின் பல குழுக்கள் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத், கேரளாவில் உள்ள எர்ணாகுளம் உள்பட 12 இடங்களில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டன.

கேரளாவில் யாக்கூப் பிஸ்வாஸ், முர்ஷித் ஹசன், முசாரப் உசைன் ஆகிய 3 தீவிரவாதிகள் சிக்கினர். இவர்கள் அப்பாவிகளை போல், ஓட்டல்கள், ஜவுளிக் கடைகளில் வேலை செய்து வந்துள்ளனர். கொச்சி கண்டன்தறையில் உள்ள ஒரு உணவகத்தில் கடந்த 2 மாதமாக புரோட்டா மாஸ்டராக யாக்கூப் பிஸ்வாஸ் வேலை செய்துள்ளான். இவன் இடுக்கி மாவட்டம், அடிமாலி பகுதியில் இருந்து 2 மாதங்களுக்கு முன்புதான் இங்கு வந்து பணியில் சேர்ந்துள்ளான். கொச்சியின் களமச்சேரியில் உள்ள பாதாளம் என்ற இடத்தில் முர்ஷித் ஹசன் வாடகை வீட்டில் வெளி மாநில தொழிலாளர்களுடன் தனி அறையில் தங்கி இருந்தான்.

அவன் கட்டிட பணி உள்பட எல்லா கூலித்தொழிலையும் செய்து வந்து உள்ளான். பெரும்பாவூர் ஜவுளிக்கடையில் முசாரப் உசைன் பணிபுரிந்து வந்தான். அவனுடைய மனைவி, 2 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தான். இவர்கள் 3 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் கொச்சியில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வீட்டில் ரகசிய அறை

மேற்கு வங்கம் மாநிலம், முர்ஷிதாபாத்தல் கைது செய்யப்பட்ட 6 தீவிரவாதிகளில் ஒருவனான, அபு சுபியான் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, அந்த வீட்டில் ரகசிய அறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 10 அடி நீளமும் 7 அடி அகலமும் கொண்ட அந்த அறையில், பல்வேறு எலக்ட்ரானிக் கருவிகள், பல்புக்கள் பொருந்திய பலகை போன்றவை இருந்தன. போலீசாரிடம் சிக்கும் நிலை ஏற்படும்போது பதுங்கிக் கொள்ளவும், ஆயுதங்கள் போன்றவற்றை பதுக்கவும் இந்த ரகசிய அறையை அவன் உருவாக்கி இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆபரேஷன் சக்கர வியூகம்

கேரளாவில் சர்வதேச தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். ஐஎஸ், அல்கொய்தா தீவிரவாத அமைப்புகளுக்கு இவர்கள் ‘ஸ்லீப்பர் செல்’கள் செயல்படுவதாகவும் மத்திய உளவுதுறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வெளிமாநில ெதாழிலாளர்கள் போர்வையில் தங்கியுள்ள இவர்களை பிடிக்க ஆபரேஷன் சக்கர வியூகம் என்ற பெயரில் ரகசிய திட்டத்தை மேற்கொண்டனர். அதன்படி, மத்திய உளவுத்துறையினர் கேரளா முழுவதும் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மற்ற 190 தீவிரவாதிகள் எங்கே?

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் 200 ஐஎஸ் தீவிரவாதிகள் ஐநா இருப்பதாக எச்சரிக்கை விடுத்திருந்தது. தற்போது, என்ஐஏ எடுத்த நடவடிக்கையில், கேரளாவில் 3 தீவிரவாதிகள் மட்டுமே சிக்கியுள்ளனர். மேலும், 6 தீவிரவாதிகள் மேற்கு வங்கத்தில் சிக்கியுள்ளனர். இவர்களை தவிர, ஐநா கூறிய மற்ற 190 தீவிரவாதிகள் எங்கு பதுங்கி, செயல்பட்டு வருகின்றனர் என்பதை கண்டுபிடிக்க, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: