6 முக்கிய சிகரங்கள் இந்திய ராணுவ வசம்: ஆத்திரத்தில் சீனா துப்பாக்கிச்சூடு

புதுடெல்லி: லடாக் எல்லை பிரச்னையில் கடந்த ஏப்ரல் முதல் இந்தியா - சீனா இடையே பதற்றம் நீடித்து வருகிறது. ராணுவ, தூதரக ரீதியிலான பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், கடந்த மாதம் 29, 30 தேதிகளில் பாங்காக் திசோ ஏரி, கோங்கா லா, கோக்ரா பகுதிகளில் சீனா அத்துமீறி ஊடுருவ முயன்றது. இது இந்திய ராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. இதனிடையே, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இரு நாடுகளின் வெளியுறவு, பாதுகாப்பு துறை அமைச்சர்கள் பேச்சுநடத்தினர். இதில், எல்லையில் பதற்றத்தை தணிக்க, 5 அம்ச ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதையும் மீறி சீன ராணுவம் செயல்பட்டு வருகிறது. குளிர்காலம் தொடங்க உள்ள நிலையில், லடாக் எல்லையில் உள்ள உயரமான, ராணுவ முக்கியத்துவம் வாயந்த மலைச் சிகரங்களை சீன ராணுவம் கைப்பற்ற திட்டமிட்டு இருப்பதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, லடாக் எல்லையில் சீனாவின் ஆதிக்கம் நிறைந்த பிங்கர் 4 பகுதியில் உள்ள 6 சிகரங்களை, கடந்த மாதம் 29ம் தேதி முதல் செப்டம்பர் 2ம் வாரத்துக்கு இடைப்பட்ட 3 வாரங்களில் இந்திய ராணுவம் வசப்படுத்தி, அங்கு முகாமிட்டுள்ளது. மாகர், குருங்ம், ரெசென் லா, ரெஜாங் லா, மொக்பாரி உள்ளிட்ட சிகரங்களை சீனப் படையினர் முற்றுகையிடும் முன்பு, இந்திய ராணுவத்தினர் சென்று தங்கள் வசப்படுத்தி உள்ளனர். இதை அறிந்த சீனப் படையினர் ஆத்திரத்தில், பாங்காக் சோ ஏரியின் வடக்கு, தெற்கு பகுதியில் வானத்தை நோக்கி  துப்பாக்கிச்சூடு நடத்தினர். ரெஜாங், ரெசென் சிகரங்கள் பகுதியில் காலாட்படை, ஆயுதப்படை உள்பட 3,000க்கும் மேற்பட்ட வீரர்களை சீனா கூடுதலாக குவித்துள்ளது. மேலும், மோல்டோ காரிசன் பகுதியிலும் கூடுதல் வீரர்களை அனுப்பி ராணுவத்தை முடுக்கி விட்டுள்ளது.

Related Stories: