கொள்ளிடம் ஆற்றில் ரூ.430 கோடி செலவில் இருவழி போக்குவரத்துடன் கதவணை பணி தீவிரம்; மே மாதத்தில் தயார்

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடத்தில் இருவழி போக்குவரத்துடன் கதவணை பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த ம.ஆதனூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றில் ரூ.430 கோடி மதிப்பீட்டில் புதிய கதவணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2019 மார்ச் மாதம் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதற்கு அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.

நடப்பு வருடம் எதிர் வரும் டிசம்பரில் கதவணை பணிகள் முழுவதும் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்த்த நிலையில் ஜனவரி மாதம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு, கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது 300 பணியாளர்களை கொண்டு கதவணை கட்டுமான பணிகள் 3ஷிப்டுகளாக இரவு, பகலாக தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதுகுறித்து நிர்வாக பொறியாளர் கண்ணன் கூறுகையில், ம.ஆதனூர்- குமாரமங்கலம் இடையே கட்டப்படும் இருவழி போக்குவரத்துடன் கூடிய கதவணை பணி பல்வேறு தவிர்க்க முடியாத காரணங்களால் தாமதம் ஆகி வந்தன.

தற்போது பணியாளர்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். எனவே லாக்டவுனுக்குப் பிறகு கடந்த 40 நாட்களாக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் 19 ராப்ட்டுகள் அமைந்திருக்கும் அணையில் ஒவ்வொரு ராப்டுக்கும் இடையே 4கதவுகள்  இருக்கும். தற்போது இதில் 13 ராப்ட் அஸ்திவாரப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள 6 அக்டோபர் இறுதிக்குள் முடிவுக்கு வரும். குறிப்பாக இருவழி போக்குவரத்து பணிக்கான மேல் தளம் அமைக்கும் பணிகள் எதிர்வரும் அக்டோபர் 1ல் நவீன முறையில் துவங்க உள்ளது. இதுவரையில் ஆரம்பக்கட்ட பணிகள் 55 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. வரும் 2021 மே மாதம் திட்டப்பணிகள் முழுவதும் நிறைவுபெறும் என தெரிவித்தார்.

Related Stories: