புனித நீராட ராமேஸ்வரத்தில் தடைநீடிப்பு - அக்னிதீர்த்தம் அமைதி... களைகட்டிய சதுரகிரி

மஹாளய அமாவாசைக்கு மாஸ்க் இன்றி மலையேறிய பக்தர்கள்

ராமேஸ்வரம் / வத்திராயிருப்பு : பக்தர்கள் புனித நீராட தடை உள்ளதால், மஹாளய அமாவாசையான நேற்று ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடல் வெறிச்சோடி கிடந்தது. அதேசமயம், சதுரகிரி மலைக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் மாஸ்க், சமூக இடைவெளியின்றி குவிந்தனர்.

ஆடி, தை அமாவாசை மற்றும் மஹாளய அமாவாசை போன்ற நாட்களில் இந்துக்கள் புண்ணிய தலங்களில் புனித நீராடி முன்னோர்களை வழிபடுவது வழக்கம். கொரோனா கட்டுப்பாடுகளால் ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் தீர்த்தமாட விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கிறது. இதனால் புரட்டாசி மாத மஹாளய அமாவாசை நாளான நேற்று அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் யாரும் தீர்த்தமாடவில்லை. கடல் பகுதி வெறிச்சோடி கிடந்தது.

ராமநாதசுவாமி கோயிலுக்குள் தீர்த்தமாடுவதற்கு தடை உள்ளதால் சுவாமி தரிசனத்திற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அமாவாசை நாளான நேற்று வழக்கத்திற்கு மாறாக மிகவும் குறைந்த அளவிலான பக்தர்களே கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

சதுரகிரியில் சமூக இடைவெளி `மிஸ்சிங்’: மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. மஹாளய அமாவாசையை முன்னிட்டு இக்கோயிலுக்கு செல்ல நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை அடிவார கேட் முன்பு குவிந்தனர். காலை 6.30 மணிக்கு கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்க முடியவில்லை. சமூக இடைவெளியும் கடைப்பிடிக்கப்படவில்லை. பெரும்பாலானோர் முகக்கவசம் அணியவில்லை. முதியோர், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் அறிவித்த போதிலும், பெரும்பாலானோர் குழந்தைகளுடன் வந்திருந்தனர்.

நெரிசலில் சிக்கிய விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ஜெகதீஸ்வரி (20) மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பகல் 1 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: