பட்டாபிராமில் வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை

பட்டாபிராம்: ஆவடி அடுத்த பட்டாபிராமில் பட்டப்பகலில் கம்பெனி ஊழியர் வீட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆவடியை அடுத்த பட்டாபிராம், அணைக்கட்டுச்சேரி, பெரியார் தெருவை சேர்ந்தவர் ஞானமூர்த்தி (40). இவரது மனைவி தேன்மொழி (35). இருவரும் முறையே அம்பத்தூர் தொழிற்பேட்டை, அணைக்கட்டுசேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் தம்பதியினர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர்.

மேலும், தேன்மொழி வேலைக்கு போகும்போது இரு மகன்களையும் அழைத்து கொண்டு சென்றுள்ளார். பின்னர், அவர் வேலை முடிந்து இரு மகன்களுடன் மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தேன்மொழி உள்ளே சென்று பார்த்தார். அப்போது, அங்குள்ள பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்து ஒரு சவரன் தங்க கம்மல், 4 ஜோடி வெள்ளி கொலுசு மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போய் இருந்தது. இது குறித்து தேன்மொழி கணவர் ஞானமூர்த்திக்கு தகவல் கொடுத்து வரவழைத்தார். பின்னர், பட்டாபிராம் காவல் நிலையத்தில் ஞானமூர்த்தி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுகுணா தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: